இந்து இளைஞர்களே..முஸ்லிம் பெண்களை அழைத்து வாருங்கள், வேலை தருகிறேன்! – பாஜக முன்னாள் எம்எல்ஏ பேச்சு | “We will give jobs if you bring Muslim women” – Controversial statement by former BJP MLA


உத்தரப் பிரதேசத்தில், முஸ்லிம் பெண்களை அழைத்து வரும் இந்து இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக பாஜக முன்னாள் எம்எல்ஏ ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள டோமரியாகஞ்ச் தொகுதியின் முன்னாள் பாஜக எம்எல்ஏ-வாக இருந்தவர் ராகவேந்திர பிரதாப் சிங். இவர் அடிக்கடி இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுக்களைப் பேசி சர்ச்சையில் சிக்குபவர். இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், அங்கிருந்த இளைஞர்களைப் பார்த்து, ” முஸ்லிம் பெண்ணை அழைத்து வரும் இந்து இளைஞருக்கு, நாங்கள் வேலை ஏற்பாடு செய்து கொடுப்போம்” என்று பேசியிருக்கிறார்.

அவர் இவ்வாறு பேசியதும் கூட்டத்தில் இருந்தவர்கள் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட்டுள்ளனர்.

ராகவேந்திர பிரதாப் சிங்கின் இந்த பேச்சு, சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றத்தைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆம் ஆத்மி கண்டனம்

இது”குற்றச் செயல்களை நேரடியாகத் தூண்டும் செயல்” என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் கடுமையாக சாடியுள்ளார். மேலும் இதுகுறித்து காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “இந்துக்களே, நீங்கள் வேலை விரும்பினால், முதலில் ஒரு கெட்டவராக மாறி, வேறு மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஓடிவிடுங்கள்” என்று பாஜக கூறுகிறது.எந்த இந்து பெற்றோர் தங்கள் மகன்கள் இழிவானவர்களாக இருக்க விரும்புகிறார்கள்?இது உலகில் இந்து மதத்தின் அடையாளமாக மாறுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ராகவேந்திர பிரதாப் சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *