கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை மாமல்லபுரம் வரவழைத்து விஜய் ஆறுதல் கூறி வருகிறார். இந்தச் சந்திப்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விஜய் கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நேற்றிரவே கரூரிலிருந்து மாமல்லபுரம் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஒரு தனியார் விடுதியில் அத்தனை குடும்பத்தினரும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூற விஜய் இன்று காலை எட்டரை மணியளவில் தனியார் விடுதிக்கு வந்து சேர்ந்தார். காலை 9 மணிக்கு சந்திப்பு தொடங்கியது.
ஒவ்வொரு குடும்பத்தினராக தனித்தனியாகச் சந்தித்த விஜய் 15-லிருந்து 20 நிமிடங்கள் வரைக்கும் ஒவ்வொரு குடும்பத்தினிரிடமும் மனம் விட்டு பேசியிருக்கிறார்.
அவர்களிடம் துக்கம் கேட்டு ஆறுதல் கூறிய விஜய், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைப் பற்றிய முழு விவரங்களையும் கேட்டு தெரிந்திருக்கிறார். அத்தனைக் குடும்பங்களின் அத்தியாவசிய செலவுகளையும் ஏற்பதாக உறுதியளித்திருக்கிறார்.
