latest

கழுகார் : ஏரிக்கு நடுவே சாலை; கண்டுகொள்ளாத மாண்புமிகு டு கொதிக்கும் சூரியக் கட்சியினர்!

[ad_1]

பின்னலாடை மாவட்டத்தில், சூரியக் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் மாவட்டச் செயலாளர் ஒருவருக்கு, நாலாப்புறமும் அதிருப்தியாளர்களால் பிரச்னைகள் சூழ்கின்றனவாம். இதனால், சமீபத்தில் எம்.பி ஒருவரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு, மண்டல மாண்புமிகுவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அந்த மாண்புமிகுவோ, ‘என்னால் எந்த உதவியும் செய்ய முடியாது. அதிருப்தியாளர்களை நீங்கள்தான் சமாதானப்படுத்த வேண்டும்…’ என்று கைவிரித்துவிட, முகம் வெளிறிப்போய்விட்டாராம் மாவட்டச் செயலாளர்.

‘சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட, சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்’ என்று முடிவெடுத்த மா.செ., அதிருப்தியாளர்களைத் தேடித்தேடி நேரில் சந்தித்துவருகிறாராம். ‘நடந்தவற்றை எல்லாம் மறந்துவிடுங்கள். இனி நாம் ஒன்றாக இருப்போம்’ என்று நேசக்கரம் நீட்டுகிறாராம். சிலர் டீலுக்கு ஒப்புக்கொண்டாலும், பலர் யோசித்துச் சொல்கிறேன் எனப் போக்கு காட்டுகிறார்களாம்!

‘ஜில்’ மாவட்டத்தில், ஆளுங்கட்சியின் முழுக் கட்டுப்பாட்டிலுள்ள நகராட்சியில் நடக்கும் ஊழல் சர்ச்சை வெடித்துக் கிளம்புவதால், கலக்கத்தில் இருக்கிறாராம் நகராட்சித் துணைப்புள்ளி. அவர்மீதான ஊழல் புகார்களை அறிவாலயத்துக்கு அனுப்பிவந்த அதிருப்தி கவுன்சிலர்கள், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஒட்டுமொத்த ஊழல்களையும் ஆதாரங்களுடன் பட்டியல் போட்டு, ‘இப்படியே நீடித்தால் வரவிருக்கும் தேர்தலில் டெபாசிட்கூட ஜில் தொகுதியில் வாங்க முடியாது’ என்று கையெழுத்திட்டு, தலைமைக்கு அனுப்பிவைத்திருக்கிறார்களாம்.

அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், அந்த ஊழல் ஆதாரங்களை எதிர்த் தரப்பிடம் கொடுத்து உதவி பெறவும் முடிவெடுத்திருக்கிறார்களாம். இதில் கலக்கமாகியிருக்கும் துணைப்புள்ளி, விவகாரத்தை எப்படி அமுக்குவது என்பது தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறாராம்!

மான்செஸ்டர் மாவட்ட சூரியக் கட்சியில், மாவட்ட நிர்வாகி முதல் வட்டச் செயலாளர் வரையில், அனைவரும் ரியல் எஸ்டேட்டில்தான் கவனம் செலுத்தி வருகிறார்களாம். மாவட்டப் பொறுப்பிலிருந்து, அண்மையில் நீக்கப்பட்ட நவரச நாயகன் பெயர்கொண்டவர், கோத்தகிரியில் எஸ்டேட் வாங்கியிருந்தது பெரிதாகப் பேசப்பட்டது. அவரைப்போலவே, கட்சித் தலைவரின் அடைமொழியையே தனது பெயரின் அடையாளமாக வைத்துள்ள மற்றொரு மாவட்ட நிர்வாகி, வால்பாறை மலைப்பகுதியில் ஒரு எஸ்டேட்டை உறவினர் பெயரில் வாங்கியுள்ளாராம். இந்த விவகாரம் உடன்பிறப்புகளுக்குத் தெரியவரவே, ‘கட்சிப் பணிகளைச் செய்ய நையா பைசா வெளியில் எடுப்பதில்லை… ஆனால், எஸ்டேட் வாங்க மட்டும் காசு எப்படி வந்தது..?’ என்று கொதித்துப்போயிருக்கிறார்களாம்!

மலர்க் கட்சியில்தான் ரவுடிகள், சர்ச்சைப் புள்ளிகளைத் தேடித்தேடி கட்சியில் இணைத்துக்கொள்வார்கள். அவர்களுடன் கூட்டணியிலிருக்கும் இலைக் கட்சியிலும் அதுபோன்ற நடைமுறைகள் ஆரம்பித்திருக்கிறதாம். அதாவது, இலைக் கட்சியின் சார்பு அணிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். தலைநகரிலுள்ள ‘மரம் வளர்ப்பு’ மன்னரின் பெயர்கொண்ட மாவட்டச் செயலாளர், பிரபல ரவுடியின் அடிபொடியாக இருந்து வழக்குகளில் சிக்கிய ஒருவருக்கு, இளைஞரணியில் முக்கியப் பொறுப்பு கொடுத்திருக்கிறாராம். அதேபோல அங்காடி நகர் மாவட்டச் செயலாளரும், கஞ்சா வழக்கில் சிக்கிய ஒருவருக்கு பேரவையில் முக்கியப் பொறுப்பு வழங்கியிருக்கிறாராம். இந்த விவகாரம் கட்சிக்குள் பெரும் சர்ச்சையைக் கிளப்பவே, விசாரணையில் இறங்கியிருக்கிறதாம் இலைக் கட்சி தலைமை!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் புதிய பேரூராட்சி அலுவலகத்தின் பின்புறம், பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான பெரிய ஏரி உள்ளது. அதன் அருகிலேயே, திருக்கழுக்குன்றம் தி.மு.க ஒன்றியப் புள்ளிக்குச் சொந்தமான இடம் உள்ளதாம். அந்த இடத்தை வீட்டுமனைப் பிரிவுகளாகப் பிரித்து விற்பனை செய்ய ஏற்பாடு நடக்கிறது. அதற்காக, பொது ஏரிக்கு நடுவே சுமார் அரை கி.மீட்டர் தூரத்திற்கு 20 அடி அகலத்திற்குச் சாலை அமைத்திருக்கிறாராம் அந்த ஒன்றியப் புள்ளி. இவ்விவகாரம் லோக்கலில் பெரும் சர்ச்சையாக உருவானதை அடுத்து, மாவட்ட மாண்புமிகுவுக்குப் புகார் சென்றிருக்கிறது. ஆனால், மாண்புமிகுவின் சமூகப் பாசத்தால், அந்த விவகாரம் அப்படியே அமுக்கப்பட்டுவிட்டதாம். ‘தேர்தல் நேரத்தில் இதுபோன்று ஆக்கிரமிப்பு செய்து, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டால், எப்படி வெற்றிபெற முடியும்…’ என்று நொந்துகொள்கிறார்கள் உடன்பிறப்புகள்!

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *