கேரள மாநிலத்தில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதை கருத்தில் கொண்டு இப்போதே பல தாராள திட்டங்களை அறிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். அதுபோன்று கேரளா பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்ததற்கு ஆளும் சி.பி.எம் கூட்டணியில் உள்ள சி.பி.ஐ கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து அந்த திட்டம் குறித்தும் ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் இதுபோன்ற பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மாநிலத்தில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஏழு பேர் கொண்ட அமைச்சரவை துணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த துணைக் குழுவிற்கு பொதுக் கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி தலைவராகவும், அமைச்சர்கள் கே.ராஜன், பி.பிரசாத், ரோஷி அகஸ்டின், பி. ராஜீவ், ஏ.கே.சசீந்திரன், கே. கிருஷ்ணன்குட்டி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். துணைக்குழுவின் ஆய்வு அறிக்கை வெளியிடப்படும் வரை திட்டம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும். இந்த விவரம் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.
உலகுக்கே முன்மாதிரியாக அதிதீவிர வறுமை ஒழிப்பு நிலையை கையில் எடுத்துள்ளோம். அதன் ஒருபாகமாக பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டம் தொடங்கப்படும். சமூக பென்சன் பெறாத சமூகத்தில் பின்தங்கிய பெண்கள், திருநங்கைகள் உள்ளிட்டோருக்கு மாதம் 1000 ரூபாய் பெண்கள் பாதுகாப்பு பென்சன் வழங்கப்படும். 35 வயது முதல் 60 வயது வரையிலான 33,34,000 பெண்கள் இதன்மூலம் பயன்பெறுவார்கள். இதற்காக ஆண்டுக்கு 3800 கோடி ரூபாய் செலவிடப்படும். இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் நிதி உதவி வழங்கும் திட்டத்தின்படி 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிகிரி-க்கு பிறகு பயிற்சி வகுப்புகளில் படிப்பவர்களுக்கும், போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் மாதம் 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். இதன்மூலம் 5 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக அரசு ஆண்டுக்கு 600 கோடி செலவிடும்.
