புதிய நிர்வாகக் குழு
அதேமாதிரி, நேற்று மாலையில் 28 பேர் அடங்கிய புதிய நிர்வாகக் குழு ஒன்றையும் விஜய் அறிவித்திருக்கிறார். கட்சியின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் தன்னுடைய உத்தரவின்படி கவனிப்பதற்காக இந்த குழு என விஜய் கூறியிருக்கிறார்.
பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கொள்கைப்பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் என முக்கிய நிர்வாகிகளும் 15 க்கும் மேற்பட்ட மா.செக்களும் அந்த நிர்வாகக்குழுவில் இடம்பிடித்திருக்கின்றனர்.
இந்தப் பட்டியலில் சில கவனிக்கத்தக்க அம்சங்களும் இருக்கிறது. விஜய்க்கு நெருக்கமான நிர்வாகியாக அறியப்பட்ட பொருளாளர் வெங்கட்ராமன், துணைப் பொருளாளர் ஜெகதீஷ் ஆகியோரின் பெயர் இந்தப் பட்டியலில் இல்லை. கட்சியில் உரிய முக்கியத்துவம் கிடைப்பதில்லை என வெங்கட்ராமன் அதிருப்தியில் இருந்ததாக பனையூர் வட்டாரத்தினர் தகவல் சொல்கின்றனர். அதனால் மற்ற தலைமைக்கழக நிர்வாகிகளுடன் சேராமல் தனித்தே செயல்பட்டு வந்தார்.
கரூர் குடும்பங்களை விஜய் சந்தித்த போது கூட அந்த கூட்டத்திற்கு வந்த வெங்கட்ராமனை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் சர்ச்சையாகியிருந்தது.
அதேமாதிரி, சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் இணைந்த தனியார் கல்வி நிறுவனத்தின் தலைவர் மரிய வில்சனுக்கும் சென்னை மாவட்டத்தின் நிர்வாகக்குழு பொறுப்பை விஜய் கொடுத்திருக்கிறார். கரூர் சம்பவத்தில் சிறை சென்று ஜாமீனில் வெளி வந்திருக்கும் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகனுக்கும் நிர்வாகக்குழுவில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
விஜய் அறிவித்திருக்கும் இந்த நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று பனையூர் அலுவலகத்தில் நடக்கிறது. கட்சியில் கட்டமைப்புரீதியாக சில மாற்றங்களை செய்ய விஜய் முடிவெடுத்திருப்பதாகவும் அது சம்பந்தமாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் கூறுகிறார்கள்.
