கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையடிவார சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானை, சிறுத்தை, காட்டு மாடு, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும். இவற்றில் யானைகள் அருகில் உள்ள கிராமங்களில் உலா வருவது வழக்கம். அங்கு தொண்டாமுத்தூர் அருகே உள்ள குப்பேபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில், நேற்று இரவு 25 மதிக்கத்தக்க ஆண் யானை சென்றுள்ளது.

அந்த யானை நாகராஜன் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்துள்ளது. அண்மையில் அந்தப் பகுதியில் உயர் மின் அழுத்த கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை அங்கு சென்ற அந்த யானை மின் கம்பத்தை முட்டித் தள்ளியது. இதில் மின் கம்பம் யானை மீது விழுந்து, மின்சாரம் பாய்ந்து யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தோட்டத்தின் உரிமையாளர் நாகராஜன் வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

அந்தத் தகவலின் அடிப்படையில், வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே பகுதியில் தான் கடந்த வாரம் ரோலக்ஸ் என்று பெயரிடப்பட்ட ஆண் காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
முதல் கட்ட விசாரணையில் அந்த இடத்தில் மின்வேலி இருந்ததால் யானை அதை கடந்து செல்ல முயற்சி செய்துள்ளது. கடந்த சில நாள்களாக கோவையில் கனமழை பெய்து வந்ததால் அப்பகுதி சேறும், சகதியுமாக இருந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக யானை மின்கம்பத்தை முட்டி, விழுந்திருக்கலாம் என்று வனத்துறையினர் கூறியுள்ளனர்.

உயிரிழந்த யானைக்கு பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆனைமலை பருத்தியூர் அருகே வயது முதிர்ந்த பெண் யானை ஒன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளது.