இன்றைய சூழலில், நாம் தி.மு.க-வுடன் கூட்டணியைத் தொடர்கிறோம். நாளைக்கு என்னாகும் என்பது தெரியாது. பீஹார் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே, டெல்லி தலைமையின் மனநிலை என்னவென்பது புரியவரும். தவெக தலைவர் விஜய்யுடனான கூட்டணி குறித்து, பொதுவெளியில் யாரும் பேச வேண்டாம். டெல்லி தலைமை என்ன முடிவெடுக்கிறதோ, அதையொட்டி நமது பயணத்தைத் தொடர்வோம்’ என்று பொடி வைத்துப் பேசினார். ஜோடங்கரின் பேச்சு, காங்கிரஸ் தலைவர்களை குழப்பமடையவும் செய்திருக்கிறது. திமுக-வுடன் அனுசரணையாகச் செல்வதா, வேண்டாமா என்பதில் யாருக்கும் தெளிவில்லை. அதனால்தான், விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜா சொக்கரின் திருமண விழாவுக்கு முதல்வர் வந்தபோது, அவரை வரவேற்க சீனியர்கள் யாரும் பெரிதாக வரவில்லை. அக்.27-ம் தேதி, எஸ்.ஐ.ஆர் குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியபோது, அந்தக் கூட்டத்திற்கு செல்வப்பெருந்தகை செல்லவில்லை. காங்கிரஸ் சார்பில் கே.வி.தங்கபாலுதான் பங்கேற்றார்.

பீஹார் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தால், வடமாநிலங்களில் காங்கிரஸின் கரம் ஓங்கும் வாய்ப்புகள் பிரகாசமாகும். அந்த வாய்ப்பை பயன்படுத்தி, வடமாநிலங்களில் தன்னை வலுப்படுத்திக் கொள்ளவும், தென்னிந்தியாவில் புதிய கூட்டணியை அமைப்பதற்கான முயற்சியிலும் காங்கிரஸ் தலைமை ஈடுபடும். அந்தவகையில், தவெக-வுடன் கூட்டணிக்குச் செல்லலாம் என்கிற கணக்கில் இருக்கிறது டெல்லி காங்கிரஸ் மேலிடம். ஒருவேளை, பீஹாரில் ஆட்சியமைக்க முடியாத சூழல் உருவானால், திமுக-வுடனான கூட்டணியே தொடரலாம். அதைத்தான் தன்னுடைய பேச்சில், மறைமுகமாக குறிப்பிட்டார் கிரிஷ் ஜோடங்கர். தமிழகத்தில், யாருடன் காங்கிரஸ் கூட்டணிக்குச் செல்லப்போகிறது என்பது, பீஹார் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே அமையும்” என்றனர் விரிவாக.
தவெக தரப்பிலும், காங்கிரஸை தங்களுடன் கூட்டணிக்குள் கொண்டுவர விருப்பமாகவே இருக்கிறார்கள். கரூர் சம்பவத்திற்குப் பிறகு, இரண்டு முறை விஜய்யுடன் ராகுல்காந்தி போனில் பேசியிருப்பதை, தங்களுக்கு ஆதரவான நிலைப்படாகவும் பார்க்கிறார்கள். காங்கிரஸ் – தவெக கூட்டணி அமைந்தால், சிறுபான்மை சமுக வாக்குகள், இளைஞர்களின் வாக்குகளையும் வசப்படுத்திவிடலாம் என்பது தவெக-வின் அரசியல் கணக்கு. யாருடைய கணக்கு செல்லுபடியாகப் போகிறது என்பது, பீஹார் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நவம்பர் 14-ம் தேதிக்குப் பிறகு தெரியவந்துவிடும்.
