காட்டூர் கொள்முதல் நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் நெல் மணிகள் மட்டும் 2,000 மூட்டைகள் இருக்கும் எனத் தெரிவித்தனர். இது குறித்து காட்டூர் பகுதியைச் சேர்ந்த பூங்கொடி என்கிற பெண் விவசாயி, “என் கணவர் கூலி வேலை செய்கிறார். எனக்கு இரண்டு பிள்ளைகள். இளைய மகனுக்கு வாய் பேச வராது. ஏற்கெனவே பல சுமைகள் என்னை அழுத்தி வரும் நிலையில் 5 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்து நடவு செஞ்சேன். பத்து நாளைக்கு முன்னாடியே அறுவடை செய்திருக்கணும். கொள்முதலில் மூட்டைகள் தேங்கியதால் இப்போதைக்கு அறுவடை செய்ய வேண்டாம் எனச் சொல்லிவிட்டார்கள். தீபாவளிக்கு முன்பு நெல்லை போட்டு விடலாம் என நினைச்சேன் முடியல.

தொடர் மழை பெய்ததில் வயலில் நெற்பயிர் சாய்ந்து தேங்கி நிற்கும் மழை நீரில் மூழ்கி முளைத்துவிட்டன. இனி அந்த நெல் தேறுவதற்கு வாய்ப்பில்லை. கொள்முதல் சரியாக நடந்திருந்தால் என் பயிருக்கு இந்நிலை ஏற்பட்டிருக்காது. என்னைப் போன்ற குத்தகை விவசாயிகளுக்கும், சிறு விவசாயிகளுக்கும் விவசாயக் கடன் தருவதில்லை, நகை அடகு வைத்ததையும் வாங்கவில்லை. தனியார் வங்கியில் நகையை அடகு வைத்து நடவு செஞ்சேன். நெற்பயிர் பாதிக்கப்பட்டதில் இப்போது பரிதவித்து நிற்கிறேன். அரசு, வேளாண் அதிகாரிகள் மூலம் என் நிலையை அறிந்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அப்ப தான் நானும், என் குடும்பமும் பிழைப்போம். இல்லைன்னா….” மேற்கொண்டு பேச முடியாமல் விம்மினார்.