latest

பள்ளிக்கரணை: `சதுப்பு நிலத்தில் கட்டுமான அனுமதி; எத்தனை கோடி கைமாறியது?' – அரசை சாடும் சீமான்


பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழித்து 2,000 கோடி ரூபாய் அளவில் ஊழல் ஏற்பட்டுள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் 14.7 ஏக்கர் நிலப்பரப்பில் (அளவை எண்கள். 453, 495, 496, 497, 498) பிரிகேட் மார்கன் ஹெய்ட்ஸ் (Brigade Morgan Heights) என்ற பெயரில் 1,250 ஆடம்பர குடியிருப்புகள் கட்டுவதற்கு சுற்றுச்சூழல் துறை, வனத்துறை மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) போன்ற துறைகள் சட்டத்தை மீறி அனுமதி வழங்கியது தெரியவந்துள்ளது.

சீமான்
சீமான்

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 2022 ஏப்ரலில் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டது. ராம்சார் அங்கீகாரம் பெற்ற நிலங்களில், ஈரநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள், 2017இன் படி, எந்தவொரு நிரந்தரக் கட்டுமானமும் உறுதியாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த அடிப்படை விதியைத் தமிழக அரசு அதிகாரிகள் கண்மூடித்தனமாகப் புறக்கணித்துள்ளனர். இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெற விண்ணப்பித்த நிறுவனம், தங்கள் நிலம் சதுப்பு நிலத்திலிருந்து 1.2 கி.மீ. தொலைவில் இருப்பதாகக் கூறியுள்ளது.

ஆனால், அந்த நிலம் சதுப்பு நிலத்தின் உள்ளேயே இருப்பதாக அறப்போர் இயக்கம் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டுகிறது. மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) மற்றும் மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழு (SEAC) ஆகியவை, பொதுமக்களின் பார்வைக்கு இருக்கக்கூடிய வரைபடங்களைக் கூடப் புறக்கணித்து, இந்த நிலம் ராம்சார் தளத்தின் “அருகில்” இருப்பதாகக் கூறி அனுமதி வழங்கியிருப்பது அதிகாரிகளின் கூட்டு சதியைத் தெளிவாக உணர்த்துகிறது.

ஒருபுறம், அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் 2,000 கோடி ரூபாய் முதலீட்டுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) போடுகிறார்கள். மறுபுறம், குடிமைப் பணி (IAS) அதிகாரிகளோ சட்டத்தை மீறி அனுமதி கொடுக்கிறார்கள். இதன் பின்னணியில் இன்னும் எத்தனை கோடி ரூபாய் கையூட்டு கைமாறியது?

சீமான்
சீமான்

இது வெறும் நிர்வாக சீர்கேடா அல்லது திமுக அமைச்சர்களின் நேரடித் தலையீடா? இத்தனைக் கேள்விகள் எழுப்பப்பட்டப் பிறகும் முதலமைச்சர் அமைதிக்காப்பது பேரவலம். பிரிகேட் மார்கன் திட்டத்தின் அளவை எண்கள் 453, 495, 496, 496, 498 ஆகியவை ராம்சார் தளத்திற்கு உள்ளே வருகிறது என்று தமிழ்நாடு அரசுக்கு நன்றாகத் தெரியும்.

சட்டப்படி ராம்சார் நிலத்திற்குள் எந்த  கட்டுமானத்தையும் அனுமதிக்கக் கூடாது என்பதும் இவர்களுக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான சுற்றுச்சூழல் துறை, பிரிகேட் நிறுவனத்திற்கு 15 ஏக்கர் அளவில் 1250 அடுக்குமாடி வீடுகள் கட்ட சுற்றுச்சூழல் அனுமதியும், அமைச்சர் சேகர்பாபு தலைமையிலான பெருநகர சென்னை வளர்ச்சிக் குழுமம் கட்டுமான அனுமதியும் கொடுத்துள்ளது.

மேலும் அப்போதைய அமைச்சர் பொன்முடி தலைமையிலான வனத்துறை, இந்த ராம்சார் தளத்தைப் பாதுகாக்காமல் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது. ராம்சார் தளத்தை அறிவித்துவிட்டு மாநில அரசு முன்னெடுக்கும் அனைத்து சீரழிவுகளையும் ஒன்றிய பாஜக அரசின் சுற்றுச்சூழல் துறை கைகட்டி வேடிக்கை பார்த்து வருகிறது.

“சதுப்பு நிலங்களைக் காப்போம்” என்று ஒருபுறம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உறுதிமொழி எடுக்கிறார்; ஆனால், அதே வேளையில், அவரது ஆட்சியின் கீழ் இயங்கும் துறைகளோ 2,000 கோடி ரூபாய் மதிப்பிலானக் கட்டுமானத் திட்டத்திற்கு அனுமதியளித்து, ராம்சார் தளத்தை அழிப்பதற்குப் பாதை வகுக்கின்றன.

ஸ்டாலின், மோடி
ஸ்டாலின், மோடி

சென்னையின் நுரையீரல் என்றும், வெள்ளத்தைத் தாங்கி நிற்கும் பாதுகாப்பு அரண் என்றும் போற்றப்படும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை, வெறும் பன்னாட்டு நிறுவனத்தின் லாபத்திற்காகப் பலி கொடுக்க இந்த அரசு துணிந்திருப்பது தமிழகத்தின் எதிர்காலத்திற்கே இழைக்கப்பட்டிருக்கும் துரோகம் ஆகும்.

பிரிகேட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கட்டுமான அனுமதியை உடனடியாகத் திரும்பபெற்று, அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்தி பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை மீட்டெடுக்க வேண்டும்.

அறப்போர் இயக்கம் சமர்ப்பித்த ஆதாரங்களின் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC) உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் ஈடுபாடு குறித்தும் எந்த பாகுபாடுமின்றி ஆய்வுசெய்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

மேலும் இந்த சட்டவிரோத அனுமதிகளுக்குக் காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று பாஜக – திமுக அரசுகளை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *