பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடக்கும் இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.க-வும் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
மறுபக்கம் மகாபந்தன் கூட்டணியில் 143 இடங்களில் ராஷ்ட்ரிய ஜனதா தளமும், 61 இடங்களில் காங்கிரஸும் போட்டியிடுகின்றன.
இதில் மகாபந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவும், என்.டி.ஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமாரும் முன்னிறுத்தப்பட்டிருக்கின்றனர்.
இதுபோக, ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மூன்றாவது கூட்டணியும், தனித்து களமிறங்கும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜும் என பலமுனைப் போட்டி நிலவுகிறது.
வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ, சீனியர் நிர்வாகிகள் உள்ளிட்டோரை தங்களின் கட்சியிலிருந்து நீக்கி வருவது பேசுபொருளாகியிருக்கிறது.
