பீகார் சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கு பா.ஜ.க தங்கள் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை விரைவில் முடித்துக்கொண்டன. ஆனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லை. சில தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதனால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பிரச்னைக்கு தீர்வு காண இன்று ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவை சந்தித்து பேசுகிறார்.
மற்றொரு புறம் பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் அனைத்து தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கிவிட்டன.
வேட்பாளர் தேர்வில் புதிய அணுகுமுறை
பா.ஜ.கவும், ஐக்கிய ஜனதா தளமும் இம்முறை வேட்பாளர் தேர்வில் புதிய அணுகுமுறையை கையாண்டுள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க 16 யாதவ் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியிருந்தது. ஆனால் இம்முறை வெறும் 6 யாதவ் சமுதாய வேட்பாளர்களை மட்டுமே வேட்பாளர்களை மட்டுமே அறிவித்துள்ளது.
இதே போன்று பா.ஜ.கவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளமும் வேட்பாளர் தேர்வில் புதிய அணுகுமுறையைத்தான் பின்பற்றியிருக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் கடந்த சட்டமன்ற தேர்தலில் யாதவ் சமுதாயத்தை சேர்ந்த 18 வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. ஆனால் இம்முறை யாதவ் சமுதாயத்தை சேர்ந்த வெறும் 8 வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியிருக்கிறது. பா.ஜ.கவும், ஐக்கிய ஜனதா தளமும் குஷ்வாஹா மற்றும் மிகவும் பின் தங்கிய நிஷாத் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு வேட்பாளர் தேர்வில் முக்கியத்துவம் கொடுத்துள்ளன.
இதற்கு முன்பு, அதாவது 2014-ம் ஆண்டுக்கு பிறகு பா.ஜ.க அதிக அளவில் யாதவ் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்தது. பீகாரில் 14 சதவீத மக்கள் தொகையை கொண்ட மக்கள் எப்போதும் லாலு பிரசாத் யாதவிற்கேதான் ஆதரவு கொடுத்து வந்திருக்கிறார்கள்.