மீண்டும் நெருக்கமடையும் அமெரிக்க – பாகிஸ்தான் உறவுகள் – பின்னணி என்ன?


கத்தாரின் மீது ( அங்கு தங்கியிருந்த ஹமாஸ் இயக்கத்தின் சில தலைவர்களைக் குறி வைத்து)  சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய குண்டுத்தாக்குதலை அடுத்து சௌதி அரேபியா போன்ற செல்வாக்கு மிக்க நாடே தன் பாதுகாப்புக்கு அமெரிக்காவை மட்டும் நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்து பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டது நினைவிருக்கலாம்.  

அதையொட்டி, மத்தியக் கிழக்குப் பகுதியில் தனது செல்வாக்கை  மேலும் அதிகரிக்க , பாகிஸ்தான் , இதே போன்ற பாதுகாப்பு ஒப்பந்தங்களை பிற மத்தியக் கிழக்கு நாடுகளுடனும் போட தான் தயார் என்ற சமிக்ஞைகளைக் கொடுத்துவருகிறது.  

அணு ஆயுத வல்லமை பெற்ற ஒரே இஸ்லாமிய நாடு பாகிஸ்தான்.  அமெரிக்கா ஆளுமை செலுத்தி வரும்  மத்தியக் கிழக்குப் பகுதியில் பாகிஸ்தானும் செல்வாக்குப் பெறுவதை அமெரிக்கா சற்று எச்சரிக்கையுடனே பார்க்கிறது.  இதை வைத்து பாகிஸ்தானின் மற்றொரு கூட்டாளி நாடான சீனாவின் செல்வாக்கு மத்தியக் கிழக்கில் வலுப்பெறும் சாத்தியக்கூறையும் அது கவனத்தில் கொள்கிறது.  அதே போல இஸ்ரேலுக்கு எதிரான மற்றொரு மத்தியக் கிழக்கு சக்தியான, இரானுடன் பாகிஸ்தான் நட்புடனே இருக்கிறது.  இரானுடன்  நேரடியாகப் பேசி அதன் இஸ்ரேல் விரோதப் போக்கைக் குறைக்க முடியாத அமெரிக்கா , பாகிஸ்தானை தன் பக்கத்தில் வைத்துக்கொள்வதன் மூலம் அதை செய்யலாம் என்று எண்ணுகிறதோ என்ற கருத்தும் சில வல்லுனர்கள் மத்தியில் நிலவுகிறது.  

இந்தியா- பாகிஸ்தான் - ட்ரம்ப்

இந்தியா- பாகிஸ்தான் – ட்ரம்ப்

ட்ரம்பின் அரசியல் 

ஆனால் ட்ரம்பின் அரசியல் நகர்வுகளையும், அவர் செயல்படும் விசித்திரமான பாணியையும் கவனிக்கும் பல நோக்கர்கள்,  இதை ஒரு வித “ கொடுக்கல் வாங்கல் ( transactional) பாணி என்று கூறுகின்றனர்.  ஒரு ரியல் எஸ்டேட் வணிகரான ட்ரம்ப்,  சர்வதேச அரசியலிலும்  பெரிய சித்தாந்த அடிப்படை ஏதுமின்றி,  இது போன்ற ஒரு லாப நஷ்ட கணக்குப் பார்த்து இயங்குகிறார்,  அந்த அடிப்படையில் ஏற்படும் எந்த உறவுகளும் நீண்ட காலம் தாக்குப்பிடிக்காது என்று கூறுகின்றனர். 

ஆனால் இந்த அமெரிக்க – பாகிஸ்தான் நெருக்கம் இந்தியாவுக்கு உடனடியாக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் சாத்தியக்கூறு ஏதும் இல்லை என்றே தோன்றுகிறது. 

சீனாவை பெரும் போட்டியாளராகக் கருதும் அமெரிக்க அரசு,   அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதை முக்கிய இலக்காகக் கொண்டிருக்கும் வரை,  இந்தியாவை அலட்சியப்படுத்தவோ, அதன் நலன்களுக்கு எதிராகவோ பெரிய அளவில் செயல்படாது என்ற நம்பிக்கை பன்னாட்டு அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் இருக்கிறது.  

அதே போல இந்தியா , தாலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தானுடன் சமீபத்தில் காட்டியுள்ள அரசியல் நெருக்கமும், இரு நாடுகளுக்கும் இடையில், தற்போதைய காலகட்டத்தில் ஒரு யதார்த்த அரசியலின் தேவை பற்றிய நிர்ப்பந்தத்திலானது.  அது இரு நாடுகளிடையே மக்கள் மத்தியில் ஏற்கனவே, இந்த அரசியல் மாச்சர்யங்களைக் கடந்து நிலவும், வரலாற்று ரீதியிலான உறவுகள் அடிப்படையில் வலுப்பெற்றால் அது பிராந்திய அமைதிக்கு பெரிதும் உதவும்.!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *