“முதல்வர் வருகையின் போது மோசடியாக இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது” – தென்காசி பெண்கள் புகார் | “Action is being taken to fraudulently provide free patta during CM’s visit” – Tenkasi women complain


முதல்வர் வருகையின் போது மோசடியாக இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், தகுதி உள்ள நபர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கவில்லையென்றால் முதல்வர் வருகையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மேலகரம் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த பெண்கள் எச்சரித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மஜரா குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரக்கூடிய நிலையில் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் இதனை நினைவூட்டும் விதமாக இன்றும் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

மனு அளித்த பெண்கள்

மனு அளித்த பெண்கள்

இந்தக் கோரிக்கை மனு குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கூறுகையில், “தங்கள் பகுதிகளில் சொந்த வீடு உள்ளவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. உரிய விசாரணை இல்லாமல் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்வதோடு, வேலை இல்லாமல், போதிய வருமானம் இல்லாமல் திண்டாடக்கூடிய தங்களுக்கு வீடு மனை பட்டாக்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை மோசடியாக புறம்போக்கு என்று சொல்லி பணம் பெற்றுக் கொண்டு முதல்வர் நிகழ்ச்சியில் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது குறித்து உரிய நடவடிக்கை இல்லை எனில் நாளை தென்காசி வருகை தரவுள்ள முதல்வர் மு.க ஸ்டாலினைச் சந்தித்து கோரிக்கை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அப்பகுதி பெண்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *