latest

இந்து பெண்கள் ஜிம்மிற்கு செல்லாதீர்கள், வீட்டில் யோகா செய்யுங்கள் என்று கூறும் பா.ஜ.க எம்.எல்.ஏ | BJP MLA tells Hindu women not to go to gym, do yoga at home


மகாராஷ்டிராவில் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களும் சிவசேனா எம்.எல்.ஏ.க்களும் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தற்போது சாங்கிலி மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ. கோபிசந்த் படல்கர் பெண்கள் உடற்பயிற்சிக்காக ஜிம் செல்வது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார்.

அவர் பீட் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, “‘கல்லூரிக்குச் செல்லும் பெண்கள் வீட்டில் யோகா செய்ய வேண்டும். ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்ய செல்லும்போது அங்கு இருக்கும் பயிற்சியாளர் குறித்து உங்களுக்குத் தெரியாது.

அவர் வேறு மதத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். இதற்குப் பின்னால் மிகப்பெரிய சதி இருப்பது உங்களுக்குத் தெரியாது. எனவே வீட்டிலேயே இந்து பெண்கள் ஜிம்மிற்குச் செல்லாமல் யோகா செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் சரியான அடையாள அட்டை போன்ற விவரங்கள் இல்லாமல் கல்லூரி வளாகங்களுக்குள் செல்லும் இளைஞர்களைக் கண்டறிந்து உள்ளே நுழைவதைத் தடுக்க வேண்டும் என்றும் இதற்கு ஒரு வலுவான தடுப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு சிவசேனா எம்.எல்.ஏ. சங்க்ராம் ஜக்தாப் தீபாவளிக்கு பொருட்கள் வாங்கும்போது அதனை இந்துக்கள் நடத்தும் கடைகளில் வாங்க வேண்டும் என்று கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சுலே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில், ”சிவசேனா எம்.எல்.ஏ.பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் பேசுவது துரதிஷ்டவசமானது. கொரோனா காலத்தில் அதார் பூனாவாலாவின் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை எம்.எல்.ஏ. எதிர்ப்பாரா? அல்லது டாடா நிறுவனம் தயாரிக்கும் பொருட்களை எதிர்ப்பாரா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *