latest

அமெரிக்காவை காப்பாற்றும் டேட்டா சென்டர்-கள்.. அப்போ இந்தியாவின் நிலைமை என்ன..?


டேட்டா சென்டர், இந்தியாவில் சமீபத்தில் அதிகம் பேசப்பட்டு வரும் ஒரு விஷயம். 2 வருடத்திற்கு முன்பு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய மக்களின் தரவுகளை இந்திய மண்ணிலேயே சேமிக்க வேண்டும் என்ற முக்கிய கட்டுப்பாட்டை விதித்தது மூலம் நாட்டில் டேட்டா சென்டர் தேவை அதிகரித்தது. ஆனால் அமெரிக்காவில் அந்நாட்டின் பொருளாதாரமே டேட்டா சென்டரை தான் நம்பியுள்ளது என்பது தெரியுமா..? அதிலும் குறிப்பாக 2025ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் நடந்த விஷயங்களை பார்க்கும் போது பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி, டேட்டா சென்டர்கள் மீது செய்யப்பட்ட முதலீடுகள் கணக்கில் சேர்க்கவில்லை என்றால் அந்நாட்டின் பொருளாதாரம் வெறும் 0.1 சதவீதம் மட்டுமே இருந்திருக்கும் என்று ஹார்வர்ட் பொருளாதார வல்லுனர் ஜேசன் ஃபர்மன் கண்டறிந்துள்ளார். இந்த தகவல் தற்போது சமுக வலைத்தளத்தில் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவை காப்பாற்றும் டேட்டா சென்டர்-கள்.. அப்போ இந்தியாவின் நிலைமை என்ன..?

சமீபத்தில் கூகுள் விசாகபட்டினத்தில் 1 ஜிகாவாட் டேட்டா சென்டரை அமைக்க சுமார் 15 பில்லியன் டாலர் தொகையை அடுத்த 5 வருடத்தில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் நீட்சியாக தான் இந்தியாவில் இத்தகைய பெரும் தொகையை முதலீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க பொருளாதாரம் தற்போது ஒரு பெரிய டேட்டா சென்டராக மாறியுள்ளது என்று ஜேசன் ஃபர்மன் கூறியுள்ளார். இந்த மிகப்பெரிய மாற்றம், ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மூலம் ஏற்பட்டு உள்ளதாகவும் விவரிக்கிறார்.

ஜேசன் ஆய்வின்படி, 2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் ஜிடிபி வளர்ச்சியின் 92 சதவீதம் ஏஐ தொடர்பான டேட்டா சென்டர்-களின் முதலீடுகள் மூலம் ஏற்பட்டது என கணித்துள்ளார். இந்த முதலீடுகள் இல்லாமல் கணக்கிட்டால் அமெரிக்காவின் ஜிடிபி வளர்ச்சி 0.1 சதவீதமாக இருந்திருக்கும் என தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதாரத்தில் வெறும் 4 சதவீதம் மட்டுமே இருக்கும் டெக் உள்கட்டமைப்பு துறை தான் அந்நாட்டின் 96 சதவீத வர்த்தக சந்தைக்கு உந்து சக்தியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை காப்பாற்றும் டேட்டா சென்டர்-கள்.. அப்போ இந்தியாவின் நிலைமை என்ன..?

மைக்ரோசாஃப்ட், அமேசான், கூகுள், மெட்டா, என்விடியா போன்ற ஏஐ நிறுவனங்கள் ஆண்டுக்கு சுமார் 400 பில்லியன் டாலர்கள் முதலீடுகளை செய்கின்றன. இந்த 400 பில்லியன் டாலர் மட்டுமே அமெரிக்க ஜிடிபிக்கு 1 சதவீத வளர்ச்சியை சேர்க்கிறது, இது அந்நாட்டின் நுகர்வோர் செலவு அல்லது உற்பத்தி துறையை விட டெக் இன்பரா பங்கு அதிகம்.

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக சர்வர் ரேக்குகள், ஜிபியூக்கள், கூலிங் சிஸ்டம்கள் அமெரிக்க வளர்ச்சியின் முக்கிய இயந்திரமாக மாறியுள்ளன. முன்பெல்லாம் ரயில், ஸ்டீல், கச்சா எண்ணெய், ரியல் எஸ்டேட், நுகர்வோர் சந்தை ஆகியவை முக்கிய பங்கீடு வகித்த காலம் போய் தற்போது சர்வர், டேட்டா சென்டர் போன்றவை முக்கிய பங்கீடு வகிக்க துவங்கியுள்ளது.

கிளவுட் சேவை துறையில் ஏற்பட்ட புரட்சியை காட்டிலும் தற்போது ஏஐ துறையில் உருவாகியுள்ள புரட்சி மிகப்பெரியதாக உள்ளது. இது எந்த அளவுக்கு பூதாகரமாக வெடித்துள்ளது என்றால் நதிகள் மற்றும் ரயில்வே வழித்தடங்களை சுற்றி நகரங்கள் உருவாவது போல், இப்போது தரவு மையங்களைச் சுற்றி நகரங்கள் உருவாகி வருகிறது.

இந்த மாற்றம், பொருளாதார வளர்ச்சியில் புதிய மாற்றத்தை காட்டுகிறது. ஏஐ மீதான முதலீடு, உலக பொருளாதாரத்தை வடிவமைக்கும் புதிய சக்தியாக விளங்குகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *