தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களுக்கு இனிப்பு மற்றும் பல்வேறு பரிசுகளை வழங்குவதை நாம் பார்த்திருக்கிறோம் . சில நிறுவனங்கள் பலவிதமான பரிசுகளை வழங்கி ஊழியர்களை திக்கு முக்காட வைத்திருக்கின்றன.
அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் தான் ஒரு நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு விஐபி சூட்கேஸ் வழங்கி திக்கு முக்காட வைத்தது. மற்றொரு தனியார் நிறுவனம் ஒன்று தங்களுடைய ஊழியர்களுக்கு காபி தயாரிக்கும் இயந்திரம், வெள்ளி பார்கள் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கி உற்சாகப்படுத்தியது. இத்தகைய சூழலில் சண்டிகரை சேர்ந்த ஒரு நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு கார்களை பரிசாக வழங்கியிருக்கிறது.

எம்கே பாட்டியா என்பவர் மிட்ஸ் ஹெல்த் கேர் என்ற பெயரில் ஒரு மருந்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய 51 ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக கார்களை வழங்கியிருக்கிறார். தொடர்ந்து மூன்றாவதாக ஆண்டாக ஊழியர்களுக்கு அவர் கார்களை பரிசாக வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தன்னுடைய பக்கத்தில் இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் பாட்டியா, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நிறுவனத்திற்காக கடினமாக உழைத்த ஊழியர்களை தேர்ந்தெடுத்து கார்களை பரிசாக வழங்கி வந்திருக்கிறோம் இந்த ஆண்டும் அந்த கொண்டாட்டம் தொடர்கிறது என கூறி இருக்கிறார். இவர்களை எப்பொழுதுமே நான் ஊழியர்கள் என அழைத்தது கிடையாது என்னுடைய நிறுவனத்தில் இவர்கள்தான் ராக்ஸ்டார் செலிப்ரட்டிகள் எனக் கூறியிருக்கிறார். இந்த தீபாவளி இவர்கள் அனைவருக்கும் ஸ்பெஷலான தீபாவளியாக இருக்கப் போகிறது எனக் கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டு 51 ஊழியர்களுக்கு கார்களை பரிசாக வழங்கி இருக்கிறார். தன்னுடைய மருந்து நிறுவனத்தின் முதுகெலும்பே ஊழியர்கள் தான் என கூறும் பாட்டியா, அவர்களின் கடின உழைப்பு, நேர்மை, பொறுப்பு ஆகியவைதான் இந்த நிறுவனத்தின் வெற்றிக்கு அடித்தளம் எனக் கூறியிருக்கிறார். அவர்களின் கடின உழைப்பை அங்கீகரிக்க வேண்டியது என்னுடைய கடமை அதை இப்படி பரிசுகள் வழங்குவதன் மூலம் நான் நிறைவேற்றிக் கொள்கிறேன் எனக்கூறி இருக்கிறார். இதன் மூலம் ஊழியர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் உற்சாகத்தோடும் ஊக்கத்தோடும் வேலை செய்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. பலரும் இந்த நிறுவன ஊழியர்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் என பாராட்டி வருகின்றனர். ஒரு பயனர் இது போன்ற ஒரு பாஸிடம் வேலை செய்யும் போது தான் நாமும் நம்முடைய உழைப்பும் அங்கீகரிக்கப்பட்டதாக உணர்வோம் இன்னமும் கூட எங்கள் நிறுவனம் தீபாவளிக்கு வரும் மின்னஞ்சலை மட்டும்தான் அனுப்பி வைத்தது என்றும் ஒரு சிலர் மின்னஞ்சல் வாழ்ந்து கூட அனுப்பவில்லை என்றும் புலம்பி வருகின்றனர்.