புதுச்சேரியில் எந்தவித குற்றச் சம்பவங்களுமின்றி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முடிந்திருப்பது, மக்களை நிம்மதி பெருமூச்சு விடச் செய்திருக்கிறது. சிறிய மாநிலமான புதுச்சேரியில் நிலவும் குற்றச் சம்பவங்களுக்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் முக்கியமான காரணங்களில் ஒன்று, காவல் துறையில் நிலவும் ஆள் பற்றாக்குறை.
இந்த நிலையில் காவல்துறை மற்றும் அரசு உயரதிகாரிகளின் இல்லங்களுக்கும் கணிசமான அளவுக்கு போலீஸார் பாதுகாப்புப் பணிகளுக்குச் சென்று விடுவதால், திணறிக் கொண்டிருக்கிறது புதுச்சேரி காவல்துறை.

இப்படியான சூழலில், பண்டிகைக் காலங்களில் பொதுமக்களுடன் சேர்ந்து பாதிக்கப்படுவது, பணியில் இருக்கும் போலீஸாரும்தான். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நேரத்தில் அரங்கேறும் கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள், பொதுமக்களை நிம்மதியிழக்கச் செய்துவிடும்.
அதேபோல வழிப்பறி, செயின் பறிப்பு, கடைகளுக்குச் செல்பவர்களின் பைகள் மற்றும் பொருட்கள் திருட்டு போன்ற வழக்குகள் பதிவாகாமல், புதுச்சேரியில் தீபாவளிப் பண்டிகை முடிந்ததில்லை.
அந்தப் படிப்பினைகளின் அடிப்படையில் இந்த ஆண்டு, குற்றச் சம்பவங்கள் இல்லாத தீபாவளி பண்டிகையை முடிக்கத் திட்டமிட்டார் டி.ஐ.ஜி சத்திய சுந்தரம்.