வணிக ரீதியிலான பாரம்பரியத்திற்குப் பெயர் பெற்ற ஜைன சமூகம், சமீபத்தில் ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதாவது ஒரே நேரத்தில் பிஎம்டபிள்யூ, ஆடி, மெர்சிடிஸ் போன்ற 186 உயர்தர ஆடம்பரக் கார்களை வாங்கியுள்ளது. இதன் மூலம், மொத்தமாக ரூ.21 கோடி தள்ளுபடியை அவர்கள் பெற்றுள்ளனர். இந்த விற்பனையை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஜைன் இன்டர்நேஷனல் டிரேட் ஆர்கனைசேஷன் (JITO) ஏற்றுக் கொண்டது. JITO அமைப்பில் இந்தியா முழுவதும் 65,000-க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த நிகழ்வு ஆடம்பரக் கார் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு அபூர்வ ஒப்பந்தம் என்று JITO-வின் துணைத் தலைவர் ஹிமான்ஷு ஷா பெருமையுடன் கூறியுள்ளார். இந்த அமைப்பு, பி.எம்.டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் போன்ற முன்னணி நிறுவனங்களின் 15 டீலர்களுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம், உறுப்பினர்களுக்குச் சிறந்த விலையைப் பெற முடிந்தது.

JITO அமைப்பு இதில் ஒரு முதலீட்டாளராக செயல்படவில்லை. இந்த ஒப்பந்தம் மூலம் தாங்கள் எந்தவித லாபமும் ஈட்டவில்லை என்றும் ஷா தெரிவித்துள்ளார். மேலும், இதன் மூலம் எங்கள் உறுப்பினர்களுக்கு சுமார் ரூ.21 கோடி தள்ளுபடி கிடைத்திருப்பதாக கூறினார்.
இந்தச் சிறப்புத் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட பெரும்பாலான ஆடம்பரக் கார்கள், குஜராத்தைச் சேர்ந்த ஜைன சமூக உறுப்பினர்களால் வாங்கப்பட்டவை ஆகும். இந்தக் கார்களின் விலை ரூ.60 லட்சம் முதல் ரூ.1.3 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த சிறப்பான ஒப்பந்த முயற்சியின் பின்னணியில், JITO உறுப்பினரான நிதின் ஜெயின் முக்கிய பங்கு வகித்துள்ளார். அவர் முன்வைத்த யோசனையின் படி, JITO உறுப்பினர்கள் தங்கள் மொத்த வாங்கும் திறனை பயன்படுத்தி, கார் டீலர்களிடமிருந்து அதிக அளவிலான தள்ளுபடிகளை பெற முடியும் என்பதை ஆதாரமாகக் கொண்டு இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, JITO அமைப்பு இந்த யோசனையை செயல்படுத்தி, 15-க்கும் மேற்பட்ட கார் டீலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரே நேரத்தில் 186 ஆடம்பர வாகனங்களை வாங்கும் அளவுக்கு திட்டத்தை முன்னெடுத்தது. இந்த திட்டத்தில் எந்தவித விளம்பரச் செலவுமின்றி, நேரடியாக வாகனங்கள் விற்பனையானதால், இது கார் நிறுவனங்களுக்கும் ஒரு சாதகமான சூழ்நிலையாக அமைந்ததாக நிதின் ஜெயின் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் ஒரு சில உறுப்பினர்களுடன் தொடங்கிய இந்த முயற்சி, பெரிய அளவிலான தள்ளுபடி சலுகைகளைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகு மேலும் பலரை ஈர்த்தது. விரைவில், மற்ற JITO உறுப்பினர்களும் கார்கள் வாங்கத் தொடங்குவார்கள். மொத்தம் 186 கார்கள் வாங்கப்பட்டதன் மூலம் ரூ.21 கோடி சேமிக்கப்பட்டது. சராசரியாக, ஒவ்வொரு உறுப்பினரும் ரூ.8 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரை சேமித்துள்ளனர்
தற்போது JITO அமைப்பு, தங்கள் உறுப்பினர்களுக்காக நகை மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் துறைகளுக்கும் இத்தகைய சிறப்புச் சலுகைகளை விரிவுபடுத்த ‘உத்சவ்’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. ஒருங்கிணைந்த வாங்கும் திறன் மூலம் சந்தையில் எப்படி குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான சிறந்த முன்னுதாரணமாக ஜைன சமூகத்தின் இந்த முயற்சி கருதப்படுகிறது.