இந்த நிலையில்தான் மதுரையைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அவசர கதியில் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, . ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற சாதிப்பெயர்களை நீக்குதல், புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19 ஆம் தேதிக்குள் முடிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நடைமுறையில் பல பிரச்னைகள் உள்ளது, மக்களின் தனிப்பட்ட ஆவணங்களில பெயர் மாற்றம் செய்வதில் நடைமுறைச் சிரமங்கள் உள்ளன. இது அரசியலமைப்பு சட்டம், பாரம்பரியம், பண்பாட்டிற்கு எதிரானது. எனவே சாதிப்பெயர்களை நீக்கும் இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் அனிதா சுமந்த், குமாரப்பன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன், ” தமிழக அரசின் இந்த திடீர் உத்தரவு குழப்பம் ஏற்படுத்தும், ஆதார், வாக்காளர் அட்டை, வாகனப் பதிவு சான்றிதழ், பாஸ்போர்ட் உள்ளிட்ட அரசு ஆவணங்களின் முகவரியில் பெயர் மாற்றம் செய்வதில் சிக்கல் ஏற்படும், இதை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு இந்த அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது, எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார்.