இந்தியாவின் பட்டாசு தேவையில் 90 சதவீதத்தை உற்பத்தி செய்யும் சிவகாசியின் வரலாறு, ஒரு துளிப் போராட்டத்தில் தொடங்குகிறது. 1922ஆம் ஆண்டில் சிவகாசியில் ஏற்பட்ட கடுமையான வேலையின்மை காரணமாக, அங்கிருந்து அய்ய நாடார் மற்றும் சண்முக நாடார் ஆகிய இரு சகோதரர்கள் தீப்பெட்டித் தொழிலைக் கற்க கொல்கத்தா சென்றனர். அங்கு 8 மாதங்கள் தங்கியிருந்து தொழிலைக் கற்றுக்கொண்ட அவர்கள், 1923ஆம் ஆண்டு தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி, ‘நேஷனல் ஃபயர் ஒர்க்ஸ்’ என்ற தீப்பெட்டித் தொழிற்சாலையைத் தொடங்கினர்.
ஆரம்பத்தில் தீப்பெட்டியுடன் தொடங்கிய இவர்களின் பயணம், சீனர்களைப் பின்பற்றிச் சிறிய பட்டாசுகளை தயாரிக்கத் தொடங்கியதன் மூலம் பட்டாசுத் தொழிலுக்குள்ளும் நுழைந்தது. தீப்பெட்டி மற்றும் பட்டாசுகளுக்கான லேபிள்கள் தொடக்கத்தில் வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்பட்டதால், ஏற்பட்ட செலவைக் கட்டுப்படுத்த, அச்சகங்களும் சிவகாசிக்கு வரத் தொடங்கின.

இப்படி தீப்பெட்டி, பட்டாசு, அச்சு ஆகிய 3 தொழில்களும் ஒன்றோடொன்று பிணைந்ததால், இன்று இந்தியாவின் 90 சதவீத பட்டாசுகளும், 80 சதவீத தீப்பெட்டிகளும், அச்சுத் தேவையில் 70 சதவீதமும் சிவகாசியில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.
பட்டாசு உற்பத்தியில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள வெம்பக்கோட்டை, சாத்தூர் போன்ற பகுதிகளில் செயல்படும் 1,000-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள்தான் இந்த மகத்தான பெருமைக்குக் காரணம். மேலும், மழை குறைவாகப் பெய்யும் கந்தக பூமியான சிவகாசியின் புவியியல் சூழல் பட்டாசு உற்பத்திக்கு மிகவும் சாதகமாக உள்ளது.
இந்துக்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளி, புத்தாடை, இனிப்பு வகைகள் மற்றும் பட்டாசுகளுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வழக்கம்போல் புத்தாடைகள், இனிப்புகள், பலகாரங்கள், மற்றும் விதவிதமான பட்டாசுகள் ஆகியவை பொதுமக்களால் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக, பட்டாசுகள்தான் குழந்தைகளை கவர்ந்து, அவர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து உற்சாகமாக வெடித்தனர்.
அந்த வகையில், பட்டாசு உற்பத்தியில் புகழ்பெற்ற சிவகாசியில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது சுமார் ரூ.7,000 கோடிக்கு பட்டாசு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகப் பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு நடைபெற்ற ரூ.6,000 கோடி விற்பனையை விட 20 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு தீபாவளிக்காகப் பட்டாசுகளை வாங்க சிவகாசி, சாத்தூர், விருதுநகர் ஆகிய ஊர்களுக்கு வெளியூர் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. இணையதளம் மூலம் விற்பனை அமோகமாக இருந்தாலும், பெரும்பான்மையான மக்கள் கடைகளுக்கு நேரடியாகச் சென்று, தங்களுக்குப் பிடித்தமான பட்டாசுகளை வாங்கியுள்ளனர்.
மேலும், பீட்சா, வாட்டர் மெலன், ஓரியோ பிஸ்கட், கதாயம், வேல், கிட்டார், சிலிண்டர் என 30க்கும் மேற்பட்ட புதிய ரகப் பட்டாசுகள் இந்த ஆண்டு சந்தைக்கு வந்திருந்தன. இருப்பினும் காற்று மாசுபடுவதை கருத்தில் கொண்டு, பட்டாசு உற்பத்தியாளர்கள் இனிவரும் காலங்களில் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே தயாரிப்பது அவசியம் என்றும் வலியுறுத்தப்படுகிறது.