பெங்களூருவா இது..? 11 கிமீ தூரத்தை கடக்க வெறும் 15 நிமிடங்கள் தான்.. வியந்து போன நெட்டிசன்ஸ்..!!


இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகராகவும், ‘சிலிக்கான் சிட்டி’யாகவும் விளங்கும் பெங்களூரு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழ்கிறது. உலகெங்கிலும் இருந்து திறமையானவர்களை ஈர்க்கும் சக்திவாய்ந்த வேலைவாய்ப்பு மையமாக இது இருப்பதால், மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆனால், இந்த வளர்ச்சியின் மறுபக்கம்தான் நகரைத் திணறடிக்கும் கடுமையான போக்குவரத்து நெரிசல். காலையில் அலுவலகம் செல்லத் தொடங்குவது முதல் இரவு வீடு திரும்புவது வரை, ஒவ்வொரு குடிமகனின் அன்றாட வாழ்விலும் போக்குவரத்து நெரிசல் என்பது ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது.

பெங்களூருவா இது..? 11 கிமீ தூரத்தை கடக்க வெறும் 15 நிமிடங்கள் தான்.. வியந்து போன நெட்டிசன்ஸ்..!!

இந்த நெரிசல் நகரின் உற்பத்தி திறனைப் பாதிப்பதுடன், மக்களின் மன அழுத்தத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. இந்நிலையில், பெங்களூருவில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சாலைகள் வெறிச்சோடி இருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. ‘ஐ.டி. ஹப்’ என அழைக்கப்படும் பெங்களூருவின் நெரிசலான சாலைகள் தற்போது வழக்கத்திற்கு மாறாக இருப்பதை கண்டு பல நெட்டிசன்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

‘ஷ்ரியா’ என்ற இன்ஸ்டாகிராம் பயனர் சமீபத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில், “முழு பெங்களூருமே தீபாவளிக்காக பெங்களூரை விட்டு வெளியேறிவிட்டது. 11 கிலோமீட்டர் தூரத்தை 15 நிமிடங்களில் அடைந்துவிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் சாலைகள் பெரும்பாலும் காலியாக இருப்பதை பார்க்க முடிகிறது.

இந்த போக்குவரத்து குறித்த அவர் பதிவிட்டிருந்த நிலையில், இதுவரை 4.32 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பார்த்து, அதில் பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு பயனர், “தீபாவளி கொண்டாடும் நபர்கள் ஊரை விட்டுப் போய்விட்டார்கள்” என்று வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர், “இதே நிலைதான் சென்னையில் இருக்கிறது. பண்டிகை காலங்களில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. கூட்டமில்லாமல் நகரம் சுவாசிக்கிறது” என்று சென்னை நிலவரத்தையும் ஒப்பிட்டுப் பதிவிட்டுள்ளார். இன்னொருவர், “குறைவான கூட்டம் காரணமாக நகரம் மிகவும் அமைதியாகவும், நிம்மதியாகவும் இருப்பதாக” குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலானோர் பெங்களூருவை ‘குடிபெயர்ந்தவர்களின் நகரம்’ என்று முத்திரை குத்தி கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், “குடிபெயர்ந்தவர்கள் இல்லாமல் பெங்களூரு, பெங்களூராக இல்லை” என்று ஒரு பயனர் பதிவிட, மற்றொருவர், “இந்தக் குடிபெயர்ந்தவர்கள்தான் கர்நாடகாவின் ஜிஎஸ்டிபியை முதல் 3 இடங்களுக்குக் கொண்டு வந்துள்ளனர்” என்று நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பைச் சுட்டிக் காட்டினார்.

இந்தக் காலியிடத்தைக் கண்டு சாதனை என்று நினைப்பது வருத்தமளிக்கிறது. குடிபெயர்ந்தவர்களும் புலம்பெயர்ந்தோரும் இந்த நகரின் அங்கம் என்பதையும், வெளியாட்கள் இல்லாமல் பெங்களூரு முழுமையடையாது என்பதையும் நகரம் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஒரு பயனர் சமூக அக்கறையுடன் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

பண்டிகை காலங்களில் மட்டும் பெங்களூருவின் சாலைகள் நெரிசல் குறைந்து, விரைவான பயண அனுபவத்தை தரும் இந்த நிகழ்வுகள், நகரத்தில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் வெளி மாநிலங்கள் அல்லது வெளி மாவட்டங்களில் இருந்து வந்து குடியேறியவர்களே என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *