சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் ஐந்து சதவீதம் வரை குறைந்திருக்கிறது இதன் மூலம் தங்கத்தின் தொடர்ச்சியான விலை உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே இருந்து வந்தது. குறிப்பாக செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய இரண்டு மாதங்களிலும் உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. இது இந்திய சந்தையிலும் மிக வலுவாக எதிரொலித்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 98000 ரூபாயை நெருங்கிவிட்டது. ஒரு கிராம் தங்கம் 12,000 ரூபாயை கடந்துவிட்டது. இது சாமானிய மக்களுக்கு கண்ணீரை வரவழைத்தது.

இத்தகைய சூழலில் நேற்று ஒரே நாளில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 5 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. திங்கட்கிழமை அன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்று உச்சத்தை எட்டி 4381.21 டாலர்களாக இருந்தது. இத்தகைய சூழலில் நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை 5 சதவீதம் சரிவடைந்தது . ஒரு அவுன்ஸ் தங்கம் 4,082 டாலர்கள் என வர்த்தகமானது.
2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் 5% வரை சரிவடைவது இதுவே முதன் முறையாகும். தற்போதைய நிலவரப்படி (அக்.22 காலை 9.54 மணி) ஸ்பாட் போல்ட் ஒரு அவுன்ஸ் 4129 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளையில் அமெரிக்க பங்குச்சந்தையில் கோல்ட் ஃபியூச்சர்ஸ் 4129.80 டாலர்களுக்கு வர்த்தகமானது .வெள்ளி விலையும் குறைந்தது ஒரு அவுன்ஸ்க்கு சுமார் 8% சரிவடைந்த 48.29 டாலர்களாக இருந்தது.
பல்வேறு நாடுகளும் அதிக அளவில் தங்கத்தை வாங்கி குவித்தது, சில நாடுகளுக்கு இடையிலான புவிசார் பதட்டங்கள் ,அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக நடவடிக்கைகள் , பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை குறைத்தது உள்ளிட்டவை காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்து வந்தது.
இத்தகைய சூழலில் தான் ஒரே நாளில் தங்கம் விலை ஐந்து சதவீதம் வரை குறைந்துள்ளது. தங்கம் விலை உச்சத்தை எட்டியதால் லாபம் பார்க்கலாம் என முதலீட்டாளர்கள் பலரும் தங்கத்தை விற்பனை செய்து லாபம் பார்த்ததே காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடிய விரைவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீன அதிபரை சந்தித்து பேச இருக்கிறார். இதன் மூலம் அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக மோதல் ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தமும் விரைவில் உறுதி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன . இந்த தகவல்கள் சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்கள் மத்தியில் ஈக்விட்டி சந்தை மீதான நம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளது. எனவே அவர்கள் தங்கத்தில் இருந்து லாபம் பார்த்துவிட்டு அந்த பணத்தை ஈக்விட்டி நோக்கி திருப்பி விட தொடங்கியுள்ளனர்.இந்த தங்கம் விலை சரிவு குறுகிய கால திருத்தம் தான் என கூறும் நிபுணர்கள் விலை குறைவை பயன்படுத்தி முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம் என அறிவுரை வழங்குகின்றனர்.