ஜெனரேட்டிவ் ஏஐ பிரிவில் பெரிய புரட்சியை ஏற்படுத்திய சாட் ஜிபிடி உரிமையாளரான ஓபன் ஏஐ நிறுவனம் தற்போது கூகுளின் குரோம் பிரவுசருக்கு போட்டியாக ஒரு ஏஐ பிரவுசரை அறிமுகம் செய்திருக்கிறது.
ஏஐ தொழில்நுட்பம் உலகம் முழுவதுமே நாம் தகவல்களை நுகரும் போக்கில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்து விட்டன. ஒரு காலத்தில் நமக்கு ஒரு தகவல் தேவை என்றால் கூகுளில் சென்று அந்த தகவலை தேடுவோம். ஆனால் தற்போது பெரும்பாலானவர்கள் சாட் ஜிபிடி, பெர்பிளெக்சிட்டி போன்ற ஏஐ செயலிகளில் தங்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்கிறார்கள்.

மக்கள் தேடுபொறிகளில் இருந்து ஜெனரேட்டிவ் ஏஐ செயலிகளை நோக்கி படிப்படியாக இடம்பெயர்ந்து வருகின்றனர். ஏற்கனவே கூகுள் நிறுவனத்திற்கு இது பெரிய தலைவலியாக தான் உருவெடுத்திருக்கிறது. கூகுள் சர்ச் இன்ஜினில் தேடுவது குறைந்து மக்கள் சாட்ஜிபிடி போன்ற செயலிகளை பயன்படுத்துவது அதிகரித்து விட்டது. இதன் காரணமாக தான் கூகுள் நிறுவனம் தங்களுடைய தேடு பொறியிலேயே ஏஐ மோட் என்ற ஒரு வசதியை கொண்டு வந்திருக்கிறது .
இத்தகைய சூழலில் தான் சாம் ஆல்ட்மேனின் ஓபன் ஏஐ நிறுவன சாட் ஜிபிடி அட்லாஸ் என்ற ஒரு பிரவுசரை அறிமுகம் செய்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படக்கூடிய இந்த சாட்ஜிபிடி அட்லாஸ் ( ChatGPT Atlas browser ) நம்முடைய தேடுதல் அனுபவத்தையே முற்றிலும் மாற்றியமைக்கும் என சாட் ஜிபிடி நிறுவனம் கூறுகிறது. தற்போதைக்கு இது மேக் பயனாளர்களுக்கு மட்டுமே கொண்டுவரப்பட்டிருக்கிறது . கூடிய விரைவில் அனைத்து விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் கொண்டு வரப்பட இருக்கிறது.
வழக்கமாக குரோமில் இருப்பதைப் போன்ற அட்ரஸ் பார் என்பது அட்லாஸில் கிடையாது . அட்லாஸில் தனி சிறப்பே அது ஒரு பிரவுசராக மட்டுமில்லாமல் நமக்கான ஏஐ ஏஜெண்டாகவும் செயல்படும். மேலும் சாட் ஜிபிடியுடன் இணைந்து செயல்படுவதால் நாம் இரண்டையும் ஒரே டேப்பில் பயன்படுத்தலாம்.
ஏஐ மோடில் நமக்கு தேவையான அனைத்து வேலைகளையும் அட்லாஸே செய்துவிடும் அதாவது நான் டெல்லிக்கு செல்ல இருக்கிறேன் என நீங்கள் கூறினால் இங்கிருந்து நீங்கள் டெல்லிக்கு செல்வதற்கான பயணத்திட்டம் ,அங்கே தங்கும் இடங்கள், சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளிட்ட அனைத்தும் அதுவே உங்களுக்கு தயார் செய்து கொடுத்து விடும். உங்களுக்காக டிக்கெட் முன்பதிவுகளை கூட கவனித்து கொள்ளும்.
ஒரு மின்னஞ்சலை உருவாக்குவது, நேர்காணலுக்கு தயாராவது , மீட்டிங்கிற்கு தயாராவ்து உள்ளிட்ட வேலைகளை அட்லாஸ் எளிதாக்கிவிடும். அட்லாஸ் ஏஐ பிரவுசர் குறித்த அறிவிப்பை ஓபன் ஏஐ நிறுவனம் வெளியிட்டதை அடுத்து அமெரிக்க பங்குச்சந்தையில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் பங்கு மதிப்புகள் 3.4% சரிந்தது. ஏற்கனவே பெர்பிளெக்சிட்டி ஏஐ நிறுவனம் கமெட் என்ற ஏஐ பிரவுசரை கொண்டு வந்தது. தற்போது ஏஐ துறையில் பெர்பிளெக்சிட்டியின் கமெட்(comet) மற்றும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் அட்லாஸுக்கும் தான் போட்டி உண்டாகியுள்ளது.