உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தையில் மிகவும் முக்கியமான ஒரு நிறுவனம் என்றால் மிகையில்லை, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஒரு நிறுவனம் தனது ஆப்ரேஷனில் லாபத்தை அதிகரிக்கவும், செயல்திறனை மேம்படுத்தவும் முக்கியமான தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏஐ, ஆட்டோமேஷன் தான் இதுவரையில் மக்களின் தூக்கத்தை தொலைத்து வந்த நிலையில், இவ்விரு தொழில்நுட்ப வளர்ச்சியுடன் மெஷின் லேர்னிங் துணையுடன் புதிய மாற்றத்தை ரோப்போக்கள் மூலம் நிகழ்த்த அமேசான் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மாத சம்பளக்காரர்களை உண்மையில் பயமுறுத்துகிறது.

அமேசான் தனது வேர்ஹவுசில் ரோபோக்களைப் பயன்படுத்தி பெரும் அளவிலான பணியாட்களை குறைக்கும் திட்டத்தை முன்னெடுத்து வருவதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பான அமேசான் திட்ட அறிக்கையை நியூயார்க் டைம்ஸ் பார்த்துள்ளதாகவும், இதோடு அமேசானின் மூத்த நிர்வாகிகளுடனான பேட்டிகள் மூலம் இந்த விஷயத்தை வெளியிட்டுள்ளது.
அமேசான் இத்திட்டத்தை முழுமையாக அமலாக்கம் செய்தால் அமெரிக்க சந்தையில் மட்டும் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை ரோபோக்கள் வாயிலாக மாற்ற திட்டமிட்டு உள்ளது. இந்த மாற்றம், நிறுவனத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து உறுதிப்படுத்தும் அதே வேளையில், தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமேசான் நிறுவனத்தின் அமெரிக்க ஊழியர்கள் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டிலிருந்து மூன்று மடங்காக அதிகரித்து தற்போது சுமார் 12 லட்சமாக உள்ளது. இந்த நிலையில் அமேசானின் ஆட்டோமேஷன் குழு, 2027ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவில் கூடுதலாக 160,000 பேரை வேலைக்கு அமர்த்த வேண்டிய நிலையை தவிர்க்கும் என எதிர்பார்க்கிறது.
இந்த அணுகுமுறை மூலம் அமேசான் விற்கும் ஒவ்வொரு பொருட்களுக்கு சுமார் 30 சென்ட் தொகையை சேமிக்கும் என கணக்கிட்டு உள்ளது. அமேசானின் வர்த்தக முறையில் பெரும் செலவை ஈர்ப்பது வேர்ஹவுஸ் தான், அதாவது பொருட்களை மேமித்து உடனுக்குடன் டெலிவரி செய்யும் கட்டமைப்பு தான்.
இந்த பிரிவின் செயல்பாட்டு இயக்கம், பொருட்கள் கையாளுதல், வரிசைப்படுத்தல், சேமிப்பு, அடையாளம் காணுதல் மற்றும் பேக்கிங் என ஆறு வகைகளாகப் பிரித்து, ரோபோக்களை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் கிடங்குகளில் மனிதர்களின் பங்கு குறைக்கப்பட்டு, ரோபோக்கள் பெரும்பாலான பணிகளை செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த அதிநவீன கிடங்குகள், ரோப்போ, ஏஐ, மெஷின் லேர்னிங், ஆட்டோமேஷன் என அனைத்து உயர் தொழில்நுட்பத்தை பபயன்படுத்தி உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கிறது. இத்தகைய ரோபோ தானியங்கி அமைப்புகள் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்க சந்தையில் ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்காமல் தவிர்க்க முடியும் என்று எதிர்பார்க்கிறது அமேசான்.

இதேவேளையில் 2033ஆம் ஆண்டுக்குள் அமேசான் தனது விற்பனையை இரு மடங்கு அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. ஆயினும் ஊழியர்கள் எண்ணிக்கை இதற்கு இணையாக அதிகரிக்காமல் ரோபோ உதவியுடன் வர்த்தகத்தை மேம்படுத்த திட்டமிட்டு உள்ளது அமேசான். இந்த ஆவணங்கள் அமேசானின் ரோபோடிக்ஸ் குழு 75 சதவீத செயல்பாடுகளை தானியங்கியாக்கும் இலக்கை கொண்டிருப்பதை வெளிப்படுத்துகின்றன.
Amazon நிறுவனத்தின் விளக்கம்
இதுக்குறித்து அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், நியூயார்க் டைம்ஸ் பார்த்த ஆவணங்கள் முழுமையற்றவை என்றும், அவை நிறுவனத்தின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு உத்தியின் உண்மை நிலையை காட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
அமேசான் செய்தித்தொடர்பாளர் கெல்லி நான்டெல் கூறுகிகையில், வரவிருக்கும் பண்டிகை காலத்திற்காக அமெரிக்காவில் மட்டும் சுமார் 250,000 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த மாற்றங்கள், தொழில்நுட்பத்தின் மூலம் செயல்திறனை உயர்த்தும் அதே வேளையில், தொழிலாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் என நிறுவனம் நம்புகிறது என விளக்கம் கொடுத்தார்.