உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், இன்று டிவிட்டரில் செய்த பதிவை பற்றி தான் மொத்த உலகமும் பேசி வருகிறது. ஏஐ துறையின் உச்சம் எப்படி இருக்கும் என்பதை வில் ஸ்மித்-ன் I, Robot படத்தை பார்த்த அனைவருக்கும் தெரியும். இது சையின் ஃபிக்ஷன் படமாக இருந்தாலும், தற்போது நிஜத்தில் நடக்கும் நாள் நெருங்கியுள்ளது என்பதை எலான் மஸ்க் தனது டிவீட் மூலம் மக்களுக்கு உணர்த்தியுள்ளார்.
டிவிட்டரில் அமேசான் நிறுவனத்தின் ரோபோக்களை பயன்படுத்துவது மூலம் 5 லட்சம் ஊழியர்களை பணியில் அமர்த்துவதை குறைக்கும் திட்டம் குறித்த பதிவுக்கு எலான் மஸ்க், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் ரோபோக்கள் உலகின் அனைத்து வேலைகளையும் மாற்றும் என்று கூறினார். இதனால், மனிதர்கள் விருப்பத்தின் பேரில் மட்டுமே வேலை செய்யும் சூழல் உருவாகும் என்று தெரிவித்தார்.

அமேசான் போன்ற நிறுவனங்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு வேலைகளை தானியங்கியாக்கும் போக்கு அதிகரித்து வருவதால், மஸ்க் இந்த விஷயத்தை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார். இது போன்ற மாற்றங்கள், பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதுக்குறித்து டெக்சாஸ் மாநில செனட்டர் டெட் க்ரூஸுடன் நடந்த ஒரு பேட்டியில், எலான் மஸ்க் எதிர்காலத்தில் மனிதகுலத்திற்கு கிடைக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் கிட்டத்தட்ட இலவசமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

ஏஐ மற்றும் ரோபோக்கள் தற்போதைய வேலைகளை தானாக செய்யும் நிலை உருவாகும் போது, மக்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே செயல்படுவார்கள் என்று அவர் விளக்கினார். உதாரணமாக, கடைகளில் வாங்குவதற்கு பதிலாக, மக்கள் தங்கள் சொந்த காய்கறிகளை வளர்க்கலாம் என்று நினைத்தால் அப்போது விவசாயம் செய்வார்கள் அதுபோல் வேலை செய்ய வேண்டும் என நினைத்தால் மக்கள் வேலை செய்யலாம் என்ற நிலை உருவாகும் என்று மஸ்க் கூறினார்.

இந்த பேட்டியில் எலான் மஸ்க் கூறுகையில், மக்களுக்கு உதவும் வகையில் பத்து பில்லியன் ரோபோக்கள் உலகளவில் உருவாக்கப்படும் என்று வலியுறுத்தினார். இந்த ரோபோக்கள், மக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் கிட்டத்தட்ட இலவசமாக வழங்கும் என்று அவர் தெரிவித்தார். இதனால், அன்றாட தேவைகள் எளிதாக நிறைவேறும் என்று மஸ்க் விவரித்தார்.
இந்த தொழில்நுட்ப முன்னேற்றம், பொருளாதார அமைப்பை மாற்றி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்தார். ஆனால் இதை எப்படி செய்யப்படுகிறது, எந்த வகையில் அனைத்து தரப்பு மக்களுக்கு இதை நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் சவால் இருக்கிறது என்றும் விளக்கினார்.