அமெரிக்கப் பொருளாதாரம் முற்றிலுமாக சரிந்து, உலகளவில் பெரும் நிதியியல் நெருக்கடி ஏற்படும் ஒரு கற்பனையான சூழ்நிலையில், தங்கம் உண்மையிலேயே பாதுகாப்பான புகலிடமாக இருக்குமா என்ற கேள்வியை நிதிக் கல்வியாளரும், ஹெட்ஜ் ஃபண்ட் மேலாளருமான அக்சத் ஸ்ரீவாஸ்தவா எழுப்பியுள்ளார். முதலீட்டாளர்கள் நினைப்பது போல் தங்கம், தப்பிக்கும் ஒரு வழியாக இருக்காது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விற்பனையாளர் இல்லாத சந்தை : அமெரிக்காவின் ஒட்டுமொத்த 38 டிரில்லியன் டாலர் கடனும் தள்ளுபடி செய்யப்பட்டு, பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு செல்லும் நிலையில், முதலீட்டாளர்கள் அனைவரும் பணமதிப்பை இழக்கும் ஃபியட் பணத்தை விட்டு விலகி, தங்கத்தை நோக்கிப் படையெடுப்பார்கள். அப்போது, 30 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு, இந்த திடீர் தேவையால் இரு மடங்காகி 60 டிரில்லியன் டாலரை தொட்டு விடும். இந்த சமயத்தில் அனைவரும் தங்கத்தை வாங்கவே விரும்புவார்கள், விற்க எவரும் முன்வர மாட்டார்கள்.

இந்தக் கட்டத்தில், முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்ய தங்கத்தை விற்க முயன்றால், அதை வாங்குபவர் யார்..? ஒரு பொருளை விற்க, அதை வாங்க ஒரு எதிர் தரப்பு இருக்க வேண்டும். ஸ்ரீவாஸ்தவா கூறுவது என்னவென்றால், ஹெட்ஜ் ஃபண்டுகள், ஓய்வூதிய நிதிகள் போன்ற நிறுவன முதலீட்டாளர்கள் என அனைவரும் திவாலாகி இருப்பார்கள். அப்படி இருக்கும் போது யாரிடம் விற்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே, இந்த விற்பனை அழுத்தத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே தரப்பு அரசாங்கங்கள் மட்டுமே. ஒரு கட்டத்தில், அரசாங்கம் தலையிட்டு, தங்கத்திற்குப் பதிலாக குறிப்பிட்ட அளவு இந்திய ரூபாய் (INR) அல்லது அமெரிக்க டாலர்களை (USD) வழங்கும் தங்கப் பத்திரம் (SGB) போன்ற ஒரு திட்டத்தை மீண்டும் கொண்டு வரக்கூடும்.
இதன் விளைவாக, முதலீட்டாளர்கள் மீண்டும் ஃபியட் பணத்தைக் கொண்டு தங்கத்தை வாங்கும் நிலைக்கு திரும்ப நேரிடும். இந்தச் சூழ்நிலையில், ஃபியட் பணம் மதிப்பற்றதாக இருந்தாலும், அரசாங்கத்தின் உத்தரவாதத்தால் அது புழக்கத்திற்கு வரும். இதன் மூலம், பொருளாதார சரிவின்போது தங்கம் என்பது Liquidity அற்ற ஒரு சொத்தாக மாறி, அதனைப் பணமாக்குவது மிகக் கடினமாகும்.
பொதுவாக கூறப்படுவது போல, அமெரிக்க டாலருக்கு உண்மையான போட்டி தங்கம் அல்ல. மாறாக, டாலருக்குப் போட்டியாக இருப்பது இந்திய ரூபாய், ஜப்பானிய யென் போன்ற பிற ஃபியட் நாணயங்களே என்று அவர் கூறியுள்ளர். இந்தக் கருத்துக்கள் ஒருபுறம் இருக்க, கடந்த வாரத் திருத்தத்திற்குப் பிறகு இந்தியச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி எழுச்சி கண்டுள்ளன.
திங்கட்கிழமை நிலவரப்படி, மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) டிசம்பர் மாதத்திற்கான தங்கத்தின் எதிர்கால விலை 2.82% உயர்ந்து, 10 கிராமுக்கு 1,30,588 டாலரை தொட்டது. தங்கம் முன்னதாக 1,32,294 டாலர் என்ற உச்சத்தைத் தொட்டு 1,27,008 டாலராக குறைந்திருந்தது.
வெள்ளியும் சுமார் 1% உயர்ந்து ஒரு கிலோகிராம் 1,58,175 டாலரை எட்டியது. உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் மீண்டும் பாதுகாப்பான சொத்துக்களை நாடுவதை இந்த எழுச்சி குறிப்பதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.