latest

ஆசியான் மாநாட்டில் கலந்துகொள்ளாத மோடி; ட்ரம்ப்பும், வர்த்தக பேச்சுவார்த்தையும் காரணமா?


வரும் 26 – 28 தேதிகளில், மலேசியாவில் 47-வது ஆசியான் உச்சி மாநாடு நடக்க உள்ளது.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரேசில் அதிபர் லூலா உள்ளிட்ட பல உலக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் இந்திய பிரதமர் மோடியும் கலந்து கொள்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கு காரணம், 2014-ம் ஆண்டு, இந்திய பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து 2022-ம் ஆண்டு மட்டும் தான் ஆசியான் உச்சி மாநாட்டில் மோடி கலந்து கொள்ளாமல் இருந்திருக்கிறார்.

மற்றப்படி, ஒவ்வொரு ஆண்டுமே தவறாமல் ஆசியான் மாநாட்டில் கலந்துகொள்வார்‌ மோடி.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

கலந்து கொள்ளமாட்டார்

ஆனால், இந்த ஆண்டு மோடி இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார் என்பதை உறுதி செய்திருக்கிறார் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம்.

இது குறித்த அவரது சமூக வலைதள பதிவில், ‘இந்தியாவில் தீபாவளி பண்டிகை இன்னும் கொண்டாடப்பட்டு வருவதால் ஆன்லைனில் கலந்து கொள்வதாக மோடி தெரிவித்துள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு பக்கம், பீகார் தேர்தல் பிரசாரமும் காரணமாக கூறப்படுகிறது.

ட்ரம்பே மிக முக்கிய காரணம்

இவை அனைத்தையும் தாண்டி, ஆசியான் மாநாட்டில் மோடி கலந்து கொள்ளாததற்கு ட்ரம்ப் ஒரு முக்கிய காரணம் என்றே கூறலாம்.

இந்தியா – அமெரிக்கா இடையை வர்த்தக பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

இந்தப் பேச்சுவார்த்தை முடிவதற்குள்‌ ட்ரம்ப் மோடியை சந்தித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்.

ஆனால், இந்தியாவின் வழக்கப்படி, ஒப்பந்தத்தை எட்டியப்பின் தான், குறிப்பிட்ட நாட்டு தலைவரை சந்திப்பார் இந்திய தலைவர்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்ப் எந்த வழக்கத்திற்குள்ளும் வரமாட்டார் என்று அனைவருக்கும் தெரியும். வர்த்தக பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் சூழலில் ட்ரம்ப் – மோடி சந்திப்பு ஒருவேளை கசப்பில் முடிந்தால், அது பேச்சுவார்த்தையைப் பாதிக்கும், இந்திய வர்த்தகத்தைப் பாதிக்கும் என இந்திய தரப்பு கருதுகிறது.

ஆசியான் உச்சி மாநாட்டிற்கு சென்றால், மோடி – ட்ரம்ப் தனிப்பட்ட சந்திப்பு நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதன் காரணமாகவே, இந்த உச்சி மாநாட்டில் நேரடியாக கலந்துகொள்வதை மோடி தவிர்க்கிறார் என்று மிக முக்கியமாக கூறப்படுகிறது.

அவருக்கு பதிலாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *