latest

புதிய உச்சம் தொட்ட தங்கம்.. திடீரென சரிந்தது ஏன்..? இனி என்னவாகும்? குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..!!


தங்கம் மற்றும் வெள்ளி விலைகள், இந்த மாதம் உச்சத்தை தொட்ட நிலையில், தற்போது சற்று குறைய தொடங்கியுள்ளன. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவுகளை பாதிக்கும் முக்கிய பணவீக்கத் தரவு (CPI) இந்த வாரம் வெளியாக இருக்கிறது. இதனால், முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியேற்றுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவே, இந்த விலை குறைவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

நேற்றைய MCX தரவுகளின்படி, டிசம்பர் மாதத்திற்கான தங்கத்தின் எதிர்கால ஒப்பந்த விலை 10 கிராமுக்கு ரூ.1,28,000 ஆக வர்த்தகமானது. இது முந்தைய விலையை விட ரூ.271 குறைவாகும். அதேபோல், வெள்ளியின் எதிர்கால ஒப்பந்த விலை ஒரு கிலோவுக்கு ரூ.1,50,000 ஆக வர்த்தகமானது. இது ரூ.327 சரிவை சந்தித்துள்ளது.

புதிய உச்சம் தொட்ட தங்கம்.. திடீரென சரிந்தது ஏன்..? இனி என்னவாகும்? குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..!!

கடந்த சில வாரங்களாக தங்கம் விலை கடுமையாக உயர்ந்த நிலையில், திங்கட்கிழமை அன்று தங்கம் ஒரு அவுன்ஸுக்கு 4,381.21 டாலர் என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. எனினும், அதன் பின்னர், இது ஆகஸ்ட் 2020-க்குப் பிறகு இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 5%க்கும் அதிகமாக சரிவடைந்துள்ளது.

சர்வதேச சந்தையில், இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 1.15 மணியளவில், ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸுக்கு 4,113.54 டாலராக வர்த்தகமானது. ஸ்பாட் வெள்ளி 0.9% குறைந்து 48.29 டாலராக இருந்தது.

ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு மீதான எதிர்பார்ப்புகள், புவிசார் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட சில காரணங்களால், இந்த ஆண்டு மட்டும் தங்கம் விலை கிட்டத்தட்ட 56% அதிகரித்துள்ளது. இருப்பினும், சமீபத்திய விலை சரிவு, முதலீட்டாளர்கள் தற்போது பணவீக்கம் மற்றும் நாணயக் கொள்கை அறிவிப்புகளை நோக்கித் தங்கள் கவனத்தைத் திருப்பியிருப்பதை காட்டுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த வாரம் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான சந்திப்பில் முக்கிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என்று கூறினார். இது உலகளாவிய வர்த்தக பதற்றங்களை குறைத்து, தங்கத்தின் பாதுகாப்புப் புகலிட மதிப்பை சற்று குறைத்துள்ளது. இதற்கிடையே, இந்த வாரம் வெளியாக உள்ள அமெரிக்க நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) தரவை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து LKP செக்யூரிட்டீஸின் துணைத் தலைவர் ஜடீன் திரிவேதி கூறுகையில், “இந்தியாவில் தொடர்ந்து நீடிக்கும் பண்டிகை கால தேவை தங்கத்தின் விலையை வலுப்படுத்துகிறது. இருப்பினும், பண்டிகைக்குப் பிறகு முதலீட்டாளர்கள் லாபத்தைப் பதிவு செய்வதால் தற்காலிக விலைத்திருத்தம் இருக்கலாம்” என்று தெரிவித்தார்.

மேலும், “இந்த வாரம் அமெரிக்கப் பணவீக்கத் தரவுகளே சந்தை எதிர்பார்ப்புகளை வழிநடத்தும். இதற்கிடையே, தங்கம் ஒரு பாதுகாப்புப் புகலிடமாக நிலைத்து, அதன் வர்த்தக வரம்பு ரூ.1,25,000 முதல் ரூ.1,30,000 வரை இருக்கும்” என்றும் அவர் கணித்துள்ளார்.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் குறுகிய கால திருத்தத்தை சந்தித்தாலும், உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள், மத்திய வங்கிகளின் கொள்முதல் உள்ளிட்டவற்றால், மத்திய கால அளவில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து வலுவாக இருக்கும் என்று சந்தை வல்லுநர்கள் நம்புகின்றனர். எனவே, தற்போதைய சரிவு என்பது வரலாற்று ரீதியான ஏற்றத்தின் ஒரு தற்காலிக இடைநிறுத்தமாக இருக்கலாம் என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *