பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக கோவை வரவுள்ளார். அவருக்கு கொடிசியா அரங்கில் பாராட்டு விழா நடத்துகிறோம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தமிழரை துணை ஜனாதிபதியாக்கிய பெருமை பாஜகவுக்கு உள்ளது. டெல்டா மாவட்டத்தின் சொந்தக்காரர் என தமிழக முதலமைச்சர் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார். உண்மையில் டெல்டா மீது அக்கறையில்லாமல் செயல்படுகிறார்.
12 லட்சம் ஹெக்டேர் நீரில் மூழ்கியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களில் நெல்லை வைத்து பராமரிக்க முடியாத அவல நிலை உள்ளது. திமுகவினர் உண்மையைப் பேசுவதில்லை. பருவ மழைக்கு முன்பாகவே மத்திய அரசு ரூ. 950 கோடி நிதி கொடுத்துள்ளனர். எங்குமே மழை முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெறவில்லை.

தேர்தல் அறிக்கையில் கொடுத்த எந்த வாக்குறுதியையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை. வெகுஜன மக்களின் விரோத அரசாக உள்ளது. வெகு விரைவில் இந்த அரசு வீட்டுக்குச் செல்லும் காலம் வரும். சட்டமன்றத்தில் கேட்கும் கேள்விக்கும், பதிலுக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது.
எனக்கு பைசல் பண்ணத்தான் தெரியும். பைசன் படம் தெரியாது. ஜாதி ரீதியான பிரச்னைகளை படமாக எடுப்பது சரியில்லை. விஜய் எங்கள் கூட்டணிக்கு வருகிறாரா என்பதை அவரிடம் கேட்க வேண்டும். தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன. ஆனால், தமிழக அரசு செய்த சாதனை ரூ.890 கோடிக்கு மது விற்பனை செய்தது மட்டும்தான்.

கடந்தாண்டை விட ரூ.150 கோடிக்கு விற்பனை அதிகம் என்பதுதான் இந்த அரசின் சாதனை. விரைவில் இது மாற்றி அமைக்கப்படும். பிஎம் ஶ்ரீ திட்டத்தில் கேரள அரசு சேருவது, மக்கள் நலனில் அந்த அரசு அக்கறையுடன் இருப்பதைக் காட்டுகிறது. “ என்றார்.