சீமானின் 9 கேள்விகள்
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நெல் கொள்முதல் விவகாரத்தில் தி.மு.க. அரசை விமர்சித்து 9 கேள்விகளை முன்வைத்திருக்கிறார்.
தனது எக்ஸ் தளப் பக்கத்தில் சீமான் கூறியதாவது:
“விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளை விரைந்து கொள்முதல் செய்ய மறுக்கும் தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
நெல் கொள்முதல் செய்ய தாமதம்
சம்பா சாகுபடியில் தற்போது விளைந்துள்ள நெற்பயிர்கள் ஒருபுறம் மழையில் மூழ்கி விவசாயிகளுக்கு பெருநட்டம் ஏற்பட்டுள்ள சூழலில், மறுபுறம் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட குறுவை சாகுபடி நெல் மூட்டைகளையும் தி.மு.க. அரசு கொள்முதல் செய்ய தாமதிப்பதன் காரணமாக நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து நிற்கின்றனர்.
‘திராவிட மாடல்’ தி.மு.க. அரசு உற்பத்தி செலவுக்கு இணையான மிகக்குறைந்த கொள்முதல் விலையை மட்டுமே நிர்ணயித்து, விவசாயிகளின் வயிற்றில் அடித்து வருகின்றது. அக்குறைந்தபட்ச கொள்முதல் விலையிலும் உரிய நேரத்தில் நெல் கொள்முதலை தி.மு.க. அரசு செய்ய மறுப்பதுதான் கொடுமையிலும் பெருங்கொடுமை.
ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் அரிசி இறக்குமதி செய்யப்படும் நிலையில், தமிழ்நாட்டில் விளைவித்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய தி.மு.க. அரசு ஒவ்வொரு ஆண்டும் தாமதிப்பது ஏன்?
நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பதத்தை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், பருவமழையும் தொடங்கியுள்ள நிலையில், இத்தனை தாமதத்திற்கு பிறகு தற்போது ஒன்றிய அரசிடம் அனுமதி கோரி முதல்வர் வெறுமனே கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?