அது என்ன 24, 22, 18 காரட்..? இது தெரிந்தால் தங்கம் வாங்கும்போது பணத்தை மிச்சம் செய்யலாம்..!!


தீபாவளி பண்டிகைக்குப் பிறகு, சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் சரிவு, முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் குழப்பத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 5% க்கும் அதிகமாக சரிந்ததாக ராய்ட்டர்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. இது ஆகஸ்ட் 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே நாளில் ஏற்பட்ட மிகக் கடுமையான வீழ்ச்சியாகும்.

இந்த விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, நகைகளுக்காகவோ அல்லது முதலீட்டிற்காகவோ தங்கம் வாங்குவதற்கு இது சரியான நேரமா என்று பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. தங்கம் வாங்கும் முடிவை எடுக்கும் முன், அதன் காரட் (Karat) குறித்து நாம் தெரிந்து கொள்வது அவசியம். நாம் செலுத்தும் விலை, நகையின் ஆயுள் மற்றும் அதன் தூய்மை ஆகியவை காரட் அளவைப் பொறுத்தே அமைகின்றன.

அது என்ன 24, 22, 18 காரட்..? இது தெரிந்தால் தங்கம் வாங்கும்போது பணத்தை மிச்சம் செய்யலாம்..!!

24 காரட் தங்கம் : இது தூய்மையான தங்கம் ஆகும். இதில் மிகக் குறைவான அளவிலேயே மற்ற உலோகங்கள் கலந்திருக்கும். 24 காரட் தங்கம் மிக அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் இருக்கும். மேலும் இது அதிக மதிப்பை கொண்டது. இருப்பினும், இது மிகவும் மென்மையானது என்பதால், எளிதில் கீறல்கள் விழக்கூடும். அப்படி இல்லையென்றால் வளைந்துவிடும். எனவே, நகை செய்ய இது உகந்ததல்ல. மாறாக, இது முதலீடு மற்றும் சேமிப்புத் தங்கமாகவே கருதப்படுகிறது.

22 காரட் தங்கம் : இந்த வகை தங்கத்தில் 91.7% தூய தங்கமும், மீதமுள்ள 8.3% செம்பு போன்ற மற்ற உலோகங்களும் கலந்திருக்கும். இது 24 காரட் தங்கத்தைப் போலவே பிரகாசமான மஞ்சள் நிறத்தை கொண்டிருந்தாலும், மற்ற உலோகங்களின் கலப்பால் போதுமான உறுதியைப் பெறுகிறது. எனவே, இது நகை மற்றும் திருமண ஆபரணங்கள் தயாரிப்பதற்கு மிகவும் ஏற்றது.

18 காரட் தங்கம் : 18 காரட் தங்கத்தில் 75% தூய தங்கமும், 25% மற்ற உலோகங்களும் கலந்திருக்கும். இது 22 காரட் தங்கத்தை விட அதிக உறுதித்தன்மையைக் கொண்டிருப்பதால், அதிக நுட்பமான வேலைப்பாடுகள் தேவைப்படும். இது, விலை உயர்ந்த மற்றும் கல் பதிக்கப்பட்ட நகைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது ஃபேஷனபிள் நகைகளுக்கு உகந்த பட்ஜெட்டிற்குள் வருகிறது.

14 காரட் மற்றும் 10 காரட் தங்கம் : இந்த வகைத் தங்கங்கள் குறைந்த சதவீதத்தில் தூய தங்கத்தையும், அதிக அளவில் மற்ற உலோகங்களின் கலவையையும் கொண்டிருக்கும். இதன் காரணமாக இவை மிக அதிக வலிமையுடனும், குறைந்த விலையிலும் கிடைக்கின்றன. 14 காரட் தங்கம் 18 காரட் தங்கத்தை விட நீடித்து உழைக்கக்கூடியது. குறிப்பாக 10 காரட் தங்கம், மிகவும் உறுதியானது மற்றும் விலை மலிவானது என்பதால், அதிக நீடித்த உழைப்பு தேவைப்படும் மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற தினசரிப் பயன்பாட்டு நகைகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *