வெளிநாட்டு மோகம்
விரைவில் பணக்காரனாக வேண்டும், கூடுதலாக சம்பாதிக்க வேண்டும் போன்ற பல்வேறு காரணங்களுக்காக 1970, 80, 90-களில் வெளிநாட்டுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
குறிப்பாக வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, கத்தார், குவைத் போன்ற நாடுகளுக்கு பயணிப்போர் அதிகம். ஆனால் அந்த நாடுகளில் இருந்த சட்டம் வெளிநாட்டிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு எதிரானதாகவே இருந்தது. அதில் ஒன்று ‘கஃபாலா சட்டம்’.
அது என்ன கஃபாலா சட்டம்?
‘கஃபீல்’ என்றால் பொருப்பாளர் எனப் பொருள். சவூதியில் 1950-களில் கொண்டுவரப்பட்ட கஃபாலா சட்டம் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்தது.
அதாவது, ஒரு தொழிலாளி சவூதி அரேபியாவுக்குச் செல்ல வேண்டுமானால், அவர் பணிபுரியும் நிறுவனத்தின் அல்லது சவூதி பிரஜையின் (கஃபீல்) பொறுப்பில்தான் நாட்டுக்குள் நுழைய முடியும்.
குறிப்பாக, அந்த நாட்டுக்குள் நுழைந்த தொழிலாளியின் பாஸ்போர்ட், விசா போன்றவற்றை கஃபீல் வாங்கி வைத்துக்கொள்ள முடியும்.
கஃபீலின் அனுமதியின்றி பணிமாற்றம் செய்துகொள்ளவோ, நாட்டை விட்டு வெளியேறவோ முடியாது. இது எல்லாவற்றுக்கும் கஃபீலின் அனுமதி தேவை.
தொழிலாளியின் ஊதியம், உணவு, உறைவிடம் போன்றவற்றை கஃபீல்தான் முடிவு செய்வார். ஒருவேளை கஃபீல் துன்புறுத்தினால், அந்தக் கஃபீலின் அனுமதியின்றி சட்ட ரீதியான புகார்கூட கொடுக்க முடியாது.
இப்படி நவீன அடிமைத்தனத்துக்கென ஒரு சட்டம் இயற்றப்பட்டிருந்தது. இந்த சட்டத்தை சிலர் தவறாகப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்தன.
கண்டனங்கள்:
வளைகுடா நாடுகளில் கிட்டத்தட்ட 25 மில்லியன் வெளிநாட்டினர் தங்கள் கஃபீலின் கீழ் உழைக்கிறார்கள். ஆச்சரியப்படத்தக்க வகையில், அதில் இந்தியர்கள் மட்டுமே சுமார் 7.5 மில்லியன் பேர் உள்ளனர்.
இந்த சட்டத்துக்கு எதிராக உலக நாடுகளின் கண்டனங்களால், இதே போன்ற சட்டத்தை வேறு வேறு பெயர்களில் செயல்படுத்திவந்த இஸ்ரேல், பஹ்ரைன் போன்ற நாடுகள் ரத்து செய்தன.
அந்த வரிசையில் இப்போது சவூதி அரேபியாவும் இணைந்திருக்கிறது. ஆனால் இன்னும் குவைத், லெபனான், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளில் இது வெவ்வேறு வடிவில் தொடர்கிறது.
சவூதி இளவரசரின் அறிவிப்பு:
இந்த சட்டத்துக்கு எதிராக சர்வதேச அழுத்தம், உலகளாவிய இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் உதவி நிறுவனங்களின் அறிக்கைகள், வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து வரும் கருத்துகள் என தொடர்ந்து விமர்சனங்கள் இருந்தாலும், இந்த சட்டம் நடைமுறையில் இருந்தது.
சவூதி அரேபியாவில் மட்டும் 13 மில்லியன் வெளிநாட்டினர் வேலை செய்கிறார்கள். இதில் 2.5 மில்லியன் இந்தியர்கள். எனவே, இந்த கஃபாலா சட்டத்தின் மூலம் துயரங்களை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில்தான் சவூதி அரேபியாவின் பட்டத்த இளவரசர் முஹம்மது பின் சல்மான் ‘விஷன் 2030’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.
அதன் அடிப்படையில் நாட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். அந்த வரிசையில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த கஃபாலா சட்டத்தை கடந்த ஜூன் மாதம் ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறார்.
அதனால், சவூதியில் இருக்கும் 2.5 மில்லியன் இந்திய தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
சவூதி இளவரசரின் இந்த அறிவிப்பின் மூலம், வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவும், நாட்டின் பிம்பத்தை மிளிர்வாக்கவும், 2029 ஆசிய குளிர்கால விளையாட்டுகள் உட்பட உலகளாவிய நிகழ்வுகளை ஒருங்கிணைக்கவும் முடிவு செய்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.