தூய்மைப் பணியாளர்கள் சென்னையில் கடந்த ஆகஸ்ட்டில் தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரி ரிப்பன் மாளிகைக்கு வெளியே இரண்டு வாரம் இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 நாள்களாகப் போராட்டக்காரர்களை அலட்சியப்படுத்தி வேடிக்கை பார்த்த அரசு, ஆகஸ்ட் 13-ம் தேதி நள்ளிரவில் காவல்துறையை வைத்து தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக இரவோடு இரவாகக் கைதுசெய்து, சுதந்திர தினத்துக்காக அவசர அவசரமாக அன்றிரவே வேறு தூய்மைப் பணியாளர்களை வைத்து ரிப்பன் மாளிகை முன்பிருந்த குப்பைகளை அகற்றியது.

கைது நடவடிக்கையின்போது, சன் பிக்சர்ஸின் `கூலி” திரைப்படத்தைப் பார்த்த முதல்வர் ஸ்டாலின், அடுத்த நாள் காலையில் அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார்.
அந்தக் கூட்டத்தின் முடிவில், தூய்மைப் பணியாளர்களுக்கு காலையில் இலவச உணவு, தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளின் கல்விக்கென புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம் வகுக்க ஏற்பாடு என ஆறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இதில், காலை இலவச உணவு முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளைகளும் கட்டணமில்லா உணவு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. இத்திட்டமானது முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு செயல்படுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ. 186.94 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
இதன்மூலம், 29,455 தூய்மைப் பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.