திண்டுக்கல் மாவட்டம், தோட்டனுத்து கிராமத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய சிமெண்ட் சாலையுடன் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டது. தற்போது அந்த வாய்க்கால் இணையும் பாலத்தில் பெரிய பள்ளம் ஒன்று உருவாகியுள்ளது. இந்தப் பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் வாகனங்களை ஓட்டிச் செல்வதில் கடும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். குறிப்பாக, அந்தப் பாலம் அருகே வசித்துவரும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அக்குழந்தைகளின் பெற்றோர்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.

“முதலில் ஒரு தண்ணீர் லாரி அந்த பாலத்தின் மீது சென்றதால் சிறிய பள்ளம் உருவானது. பின்னர் வாகனங்கள் தொடர்ந்து செல்வதால் அது பெரிதாகி தற்போது ஆபத்தான நிலைக்கு மாறியுள்ளது. அந்த தெருவில் தினசரி பல ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்வதால் வழிச்சாலையில் கடும் சிரமம் ஏற்படுகிறது. மேலும், மழைக்காலம் என்பதால் பாலம் முழுமையாக உடைந்து போய்விடும் என்ற அச்சத்திலே இருக்க வேண்டியுள்ளது. பள்ளம் பாலத்தின் ஓரத்தில் இருந்தால் பரவாயில்லை, ஆனால், மையத்தில் இருப்பதால் இரவு நேரங்களில் மிகவும் ஆபத்தாக இருக்கிறது” என அப்பகுதியின் குடியிருப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த கூத்தாயி நம்மிடம் பேசும்போது,
“ரெண்டு மாசமா நாங்க சொல்லிக்கிட்டே இருக்கோம். இந்த பாலத்தை எங்களுக்கு போட்டுத் தர மாட்டுறாங்க. ஒரு குழந்தை கூட அந்த பள்ளத்தில விழுந்துடுச்சு. பார்த்து பார்த்து நாங்க குழந்தைய வச்சிக்கிற மாதிரி இருக்கு. சம்பந்தப்பட்ட அதிகாரிங்க கிட்ட சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கல” என வருத்தத்துடன் தெரிவித்தார்.
பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறுகின்றனர்.
குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் வேண்டாமே அதிகாரிகளே!!!