கடந்த ஓராண்டு காலமாகவே இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது . வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து பெரிய அளவில் தங்களுடைய முதலீட்டை திரும்ப பெற்றது பங்குச்சந்தைகளின் சரிவுக்கு மிக முக்கியமான ஒரு காரணம்.
கடந்த சில வாரங்களாக தான் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய பங்குச் சந்தையை நோக்கி வர தொடங்கி இருக்கின்றனர். இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய தொடங்கி இருக்கின்றனர். இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து ஆறாவது நாள் ஆக ஏற்றமடைந்து வருகிறது . இனிவரும் காலங்களிலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு தொடரும் இது இந்திய பங்குச் சந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இத்தகைய சூழலில் வெளிநாட்டு முதலீட்ட நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் போக்கில் தற்போது ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அது ஐடி நிறுவனங்களை கலக்கமடைய செய்யக்கூடிய ஒரு மாற்றமாக அமைந்திருக்கிறது.
செப்டம்பர் மாத காலாண்டில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவின் 10 முன்னணி ஐடி பங்குகளில் 8 நிறுவனங்களில் தங்களின் பங்குகளை பெருமளவில் விற்பனை செய்திருக்கின்றன. டிசிஎஸ், இன்போசிஸ், டெக் மகேந்திர உள்ளிட்ட முன்னணி ஐடி நிறுவனங்களும் இதில் அடங்கும். ஆனால் இவ்வாறு வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் விற்பனை செய்த வெளியேறிய ஐடி நிறுவனங்களில் உள்நாட்டை சேர்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்திருக்கின்றன.
செப்டம்பர் மாத காலாண்டில் மட்டும் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம் நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தங்களுடைய முதலீட்டில் 2.95 சதவீதத்தை திரும்ப பெற்று இருக்கின்றன. உள்நாட்டு மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் 1.38% பங்குகளை வாங்கி இருக்கின்றன.

கோஃபோர்ஜ் நிறுவனத்திலிருந்து வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 2.68% பங்குகளை விற்பனை செய்துள்ளன. இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருந்து 1.84 புள்ளி பங்குகளை வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் திரும்ப பெற்று இருக்கின்றன . அதே வேளையில் உள்நாட்டு நிறுவனங்கள் இன்போசிஸ் நிறுவனத்தில் 1.87 புள்ளி பங்குகளை வாங்கி இருக்கின்றன. டிசிஎஸ் நிறுவனத்திலும் 1.15 புள்ளி பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்பனை செய்துள்ளனர்.
ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 1.15 புள்ளிகள் அளவிலான பங்குகளை விற்பனை செய்திருக்கின்றன . ஆனால் எல்டிஐ மைண்ட்ட்ரீ, விப்ரோ, ஒராக்கிள் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களில் மட்டும் வழக்கத்திற்கு மாறாக வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் பங்குகளை அதிகரித்திருக்கின்றன.
வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முன்னணி ஐடி நிறுவனங்களின் பங்குகளை குறைத்து வருவது பெரிய ஐடி நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற முன்னணி ஐடி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் சராசரியாக 20 சதவீதம் வரை சரிந்துள்ளன. டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதன் உச்சத்தில் இருந்து 33 சதவீதம் வரை குறைந்திருக்கிறது.
இந்திய ஐடி நிறுவனங்களின் வருவாய் அமெரிக்க வாடிக்கையாளர்களை சார்ந்துள்ளன. அமெரிக்க பொருளாதார மந்த நிலை, ஏஐ வருகை ஆகியவற்றால் அமெரிக்க நிறுவனங்கள் ஐடி சேவைக்கு நிதி ஒதுக்குவதை குறைத்துள்ளன. இது இந்திய ஐடி நிறுவனங்களின் வருவாயில் கை வைத்துள்ளது. அது மட்டுமின்றி டிரம்பின் விசா கட்டுப்பாடுகளும் ஐடி நிறுவனங்களுக்கு பிரச்சினைகளை உண்டாக்கியுள்ளது. இதனால் தான் ஐடி நிறுவன பங்குகளை வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. ஆனால் உள்நாட்டு நிறுவனங்கள் ஐடி நிறுவன பங்கு சரிவை வாங்குவதற்கான ஒரு வாய்ப்பாக பார்க்கின்றன.