மைக்ரோசாஃப்ட் நிறுவனம், உலகிலேயே மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இருப்பினும், தற்போது இந்நிறுவனம் அதன் தொழில்துறை நிலைப்பாட்டிற்கு நேர்மாறாக ஒரு முடிவை எடுத்துள்ளது. உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தனது சொந்த ஊழியர்கள் மத்தியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிருப்தியை சம்பாதித்துள்ளது.
இதற்கு காரணம், தொழில்முறை தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் ‘மைக்ரோசாஃப்ட் டீம்ஸ்’ (Microsoft Teams) செயலி தான். இந்த செயலி, ஊழியர்கள் அலுவலகத்தில் இருக்கிறார்களா இல்லையா என்பதை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தும் கருவியாக செயல்படுகிறது.

வைஃபை மூலம் வருகைப் பதிவு : மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ள புதிய கொள்கையின் படி, இந்தச் செயலி ஊழியர்களின் சாதனங்களை நிறுவனத்தின் வைஃபை சிக்னலுடன் இணைப்பதன் மூலம், அவர்கள் அலுவலகத்தில் இருப்பதை தானாகவே கண்டறிந்து, அதற்கேற்ப அவர்களின் பணி இருப்பிட நிலையை புதுப்பிக்கும். இதன் மூலம், நிர்வாகத்தால் ஊழியர்களின் அலுவலக வருகையை துள்ளியமாக கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்த மாற்றங்கள் உலகம் முழுவதும் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.
இந்த திடீர் அறிவிப்பு, கார்ப்பரேட் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொள்கை மாற்றத்துக்கு எதிராக இணையத்தில் கடுமையான விமர்சனங்களை பலரும் முன்வைத்து வருகின்றனர். தொழில்நுட்ப ஊழியர்களை வைஃபை மூலம் இருப்பிடத்தை மறைமுகமாகச் சரிபார்ப்பது வரம்பு மீறிய செயல் என்றும், இது பணியிட கண்காணிப்பு மற்றும் தனிப்பட்ட சுதந்தரம் குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த இருப்பிடச் சரிபார்ப்பு அமைப்பு பெரும்பாலும் தானியங்கி முறையில் இயங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூறியுள்ளது. ஆனாலும், ஊழியர்கள் தங்கள் மீது எப்போதும் இயங்கும் கண்காணிப்பு குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர். ஊழியர்கள் மத்தியிலும் இந்த முடிவு கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தொலைதூரப் பணியை முடிவுக்குக் கொண்டு வந்து, ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வரவழைப்பதற்கான தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்தக் கண்காணிப்புக் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனத்தின் உள் குறிப்புகளின்படி, செயற்கை நுண்ணறிவு (AI) பணியிட இயக்கவியலை வேகமாக மாற்றிக் கொண்டிருக்கின்றது. இந்த மாற்றத்தின் மத்தியில், முக்கியமான மற்றும் அர்த்தமுள்ள முன்னேற்றங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில், நிகழ்நேரத்தில் தான் உருவாகின்றன என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரெட்மாண்டில் உள்ள தலைமையகத்தில் இருந்து 50 மைல் தொலைவுக்குள் வசிக்கும் ஊழியர்கள் அனைவரும் வாரத்தில் குறைந்தது 3 நாட்கள் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று பிப்ரவரி 2026-க்குள் எதிர்பார்க்கப்படுகிறது. பிற சர்வதேச அலுவலகங்களுக்கும் இது அடுத்தடுத்து அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
