இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் இந்திய வங்கி துறையில் பொதுத்துறை வாங்கிகள் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால் தனியார் வங்கிகளே அதிகப்படியான மதிப்பீட்டை பெற்று வருகிறது. மேலும் பொதுத்துறை வங்கிகளின் சேவை தரத்தில் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் உள்ளது.
இதேவேளையில் மத்திய அரசு நீண்ட காலமாக பொதுத்துறை வங்கிகளில் தனது பங்கு இருப்பை குறைத்து தனியாருக்கு வழிவிட வேண்டும் என திட்டமிட்டு வரும் வேளையில் வங்கி ஊழியர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு முக்கியமான பிரிந்துரையை ஆர்பிஐ முன்னிலையில் வைத்துள்ளது.

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டு அளவை 49 சதவீதம் வரை அனுமதிக்க மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி முன்னிலையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும். விரைவில் ஆர்பிஐ மத்திய அரசுக்கு தன்னுடைய கருத்துகளையும், முடிவுகளை அளிக்கும் என ஒரு மூத்த அரசு அதிகாரி ஒருவர் பிசினஸ் டுடே-விடம் தெரிவித்துள்ளதாக அறிவித்துள்ளது.
தற்போதைய சட்டதிட்டத்தின் படி ஒரு பொதுத்துறை வங்கிகளில் அதிகப்படியான அந்நிய முதலீடு அளவு 20 சதவீதம் வரையில் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் தனியார் வங்கிகளில் இது 74 சதவீதம் வரை அனுமதிக்கப்படுகிறது. இந்த 20 சதவீத அளவீட்டை தான் 49 சதவீதம் வரையில் அதிகரிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.
இந்தியாவில் மொத்தம் 12 பொதுத்துறை வங்கிகள் உள்ளது, மார்ச் 2025 வரையிலான காலம் வரையில் இந்த வங்கிகள் சுமார் 1.95 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை வைத்துள்ளன. இது நாட்டின் வங்கித்துறையில் மொத்தம் 55 சதவீத பங்கீட்டை குறிக்கிறது.
மத்திய நிதி அமைச்சகத்தின் இந்த புதிய முன்மொழிவு, பொதுத்துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டை 20 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்துவது மூலம் வங்கிகளின் மூலதன அடிப்படையை வலுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என நம்புகிறது. இதேபோல் ஆர்பிஐ கொடுக்கும் பதில் தான் அடுத்தக்கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்பதையும் விளக்கப்பட்டு உள்ளது.
இதேவேளையில் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளில் தனது ஆதிக்கத்தை கைவிட கூடாது என்பதற்காக 51 சதவீத பங்குகளை தொடர்ந்து வைத்திருக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நிர்வாகம் மற்றும் கொள்கை முடிவுகளில் அரசின் பங்கு அதிகமாக இருக்கும்.
சமீப காலமாக இந்திய வங்கித்துறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்து வருவதே இந்த மாற்றத்தை அறிமுகம் செய்ய முக்கிய காரணமாக உள்ளது. உலகளாவிய முதலீட்டாளர்கள், இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர், குறிப்பாக வங்கித்துறையில் ஆர்வம் சமீபத்தில் அதிகமாக உள்ளது. இந்த ஆர்வத்தை பணமாக்கும் முயற்சியில் மத்திய அரசு அந்நிய முதலீட்டு அளவை உயர்த்த முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் துபாய் என்பிடி வங்கி ஆர்பிஎல் வங்கியில் செய்த முதலீடு, ஜப்பான் நாட்டின் சுமிட்டோ வங்கி யெஸ் வங்கியில் செய்த முதலீடு, அமெரிக்காவின் பிளாக்ஸ்டோன் நிறுவனத்தின் பெடரல் வங்கி முதலீடு, கடந்த ஆண்டு சுவிஸ் நாட்டின் சுரிச் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கோட்டாக் மஹிந்திரா ஜெனரல் இன்சூரன்ஸ் துறையில் முதலீடு ஆகியவை இந்திய நிதித்துறையில் முக்கியமான விவாதமாக மாறியுள்ளது. இந்த முதலீடுகள் தான் மத்திய அரசு அந்நிய முதலீட்டு அளவை அதிகரிக்க முக்கிய காரணமாக விளங்குகிறது.
