latest

சொந்த ஊருக்கு வரும் துணை ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு; பாதுகாப்பு வளையத்துக்குள் திருப்பூர்


குடியரசுத் துணைத் தலைவராக சி. பி. ராதாகிருஷ்ணன் அண்மையில் பொறுப்பேற்று கொண்டார். திருப்பூரை சொந்த ஊராகக் கொண்ட அவர், இன்று (அக்டோபர் 28) மற்றும் நாளை (அக்டோபர் 29) என இரண்டு நாட்கள் திருப்பூரில் தங்கி பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.

இதையொட்டி, மாநகரம் மற்றும் ஷெரீஃப் காலனியில் உள்ள அவரது வீடு, மேலும் அவர் செல்லும் வழித்தடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒத்திகை
ஒத்திகை

கோவையிலிருந்து இன்று மாலை திருப்பூருக்கு வர இருக்கும் சி. பி. ராதாகிருஷ்ணன், திருப்பூரில் உள்ள திருப்பூர் குமரன் சிலை மற்றும் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

தொடர்ந்து ஷெரீஃப் காலனியில் உள்ள வீட்டில் தங்க இருக்கும் சி. பி. ராதாகிருஷ்ணன், புதன்கிழமை காலை திருப்பூர் சந்திராபுரத்தில் உள்ள கோயிலும், முத்தூர் அருகே உள்ள குலதெய்வக் கோயிலுக்கும் செல்கிறார். தொடர்ந்து வேலாயுதசாமி மண்டபத்தில் தொழில் முனைவோர்கள், விவசாயிகள் கலந்து கொள்ளும் பாராட்டு நிகழ்வில் பங்கேற்பார்.

பாதுகாப்பு பணியில்
பாதுகாப்பு பணியில்

இதையொட்டி பல்வேறு இடங்களிலும் நேற்று போலீஸார் மோப்பநாய் சோதனையுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடத் தொடங்கினர். திருப்பூர் மாநகர் போலீஸார், சென்னை போலீஸார், சிஆர்பிஎஃப் ஆகியோர் சேர்ந்து சோதனை மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

குடியரசுத் துணைத் தலைவர் வருகையையொட்டி, சுமார் ஆயிரம் போலீஸார் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குடியரசுத் துணைத் தலைவரான பின்பு முதல்முறையாக திருப்பூர் வருகையையொட்டி, பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்:

திருப்பூர் மாநகரில் 2 நாள்களும் கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அவிநாசி வழியாக வரும் கனரக வாகனங்கள் திருமுருகன்பூண்டி வழியாக இடது புறம் திரும்பி பூலுவப்பட்டி வழியாக பி. என். ரோட்டை அடைந்து நகருக்குள் வர வேண்டும்.

தாராபுரம் சாலை வழியாக நகருக்குள் வரும் கனரக வாகனங்கள் கோவில் வழி, பெருந் தொழுவு, கூலிப்பாளையம் நாலு ரோடு வழியாக ஊத்துக்குளி சாலையை அடைந்து நகருக்குள் வரலாம்.

பாதுகாப்பு பணியில்
பாதுகாப்பு பணியில்

பல்லடம் சாலை செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் அனைத்தும் கோவில் வழி பேருந்து நிறுத்தம் வழியாக அய்யம்பாளையம் நாலு ரோடு, காளி குமாரசாமி கோவில் சாலையை அடைந்து வீரபாண்டி பிரிவு வழியாக பல்லடம் சாலையை அடைந்து நகருக்குள் வரலாம்.

இன்று குமரன் ரோடு, பார்க் ரோடு, மங்கலம் ரோடு, காமராஜர் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் தங்கள் பயண திட்டத்தை அதற்கு ஏற்ப மாற்றி அமைத்து கொள்ள வேண்டும். நாளை தாராபுரம் ரோடு, மாநகராட்சி சந்திப்பு, காமராஜர் ரோடு, வேலாயுதசாமி திருமண மண்டபம், சந்திராபுரம் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அதற்கு ஏற்ப தங்கள் பயண திட்டத்தை மாற்றி அமைத்து கொள்ளலாம் என மாநகர் போலீஸார் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *