டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க்கின் பிரம்மாண்டமான 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.83 லட்சம் கோடி) ஊதியத் திட்டத்திற்கு பங்குதாரர்கள் ஒப்புதல் அளிக்க தவறினால், மஸ்க் தனது தலைமைப் பதவியில் இருந்து விலக நேரிடலாம் என்று டெஸ்லா தலைவர் ராபின் டென்ஹோம் (Robyn Denholm) எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பான முக்கிய அறிவிப்பு, நவம்பர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள டெஸ்லாவின் ஆண்டுப் பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக, முதலீட்டாளர்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பளத் திட்டத்தின் அவசியம் என்ன..?: எலான் மஸ்க்கை மேலும் ஏழரை ஆண்டுகள் டெஸ்லாவுடன் தொடர்ந்து தலைமை ஏற்க தக்கவைத்து, அவருக்கு ஊக்கமளிக்க இந்த செயல்திறன் அடிப்படையிலான ஊதியத் திட்டம் மிகவும் முக்கியமானது என்று ராபின் டென்ஹோம் வலியுறுத்தியுள்ளார். அவரது தலைமைத்துவம் டெஸ்லாவின் வெற்றிக்கு மிகவும் முக்கியமானது என்றும், உரிய ஊக்கத்தொகை அமைப்பு இல்லாவிட்டால், நிறுவனம் அவரது நேரம், திறமை மற்றும் தொலைநோக்கு பார்வையை இழக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்தச் சம்பளத் திட்டம், டெஸ்லாவுக்கு மிகவும் லட்சியமான இலக்குகளை நிர்ணயிக்கிறது. குறிப்பாக, நிறுவனத்தின் சந்தை மூலதனத்தை 8.5 டிரில்லியன் டாலராக உயர்த்துவது, அத்துடன் ரோபோடிக்ஸ் துறைகளில் முக்கிய மைல்கல்லை எட்டுவது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, எலான் மஸ்க்கிற்கு 12 தவணைகளில் பங்கு விருப்பங்களை இந்தத் திட்டம் வழங்குகிறது.
இந்த ஊதியத் திட்டம், எலான் மஸ்க்கின் நலன்களையும் நீண்ட கால பங்குதாரர்களின் மதிப்பையும் ஒரே நேர்கோட்டில் இணைப்பதாக டென்ஹோம் குறிப்பிட்டுள்ளார். டெஸ்லாவின் நிர்வாக வாரியம், எலான் மஸ்க்குடனான நெருங்கிய உறவின் காரணமாக ஏற்கனவே கடுமையான ஆய்வுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், டெலாவேர் நீதிமன்றம் மஸ்க்கின் 2018 ஆம் ஆண்டுக்கான ஊதியத் திட்டத்தை ரத்து செய்தது. முழுமையான சுதந்திரம் இல்லாத இயக்குநர்களால் அது தவறாக வழங்கப்பட்டது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த ஊதியத் திட்டம் நிராகரிக்கப்பட்டால், அது டெஸ்லாவின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். அண்மையில் முதலீட்டாளர்களுடன் பேசிய அவர், “நான் இந்தப் பணத்தைச் செலவழிக்கப் போவதில்லை. நான் இந்தப் பணத்துக்காக வேலை செய்யவில்லை. ஆனால், என்னை எளிதில் நீக்க முடியாதபடி, அதே சமயம் டெஸ்லாவில் ஒரு வலுவான செல்வாக்கு செலுத்தும் அளவிற்கு போதுமான வாக்கு உரிமை எனக்குக் கிடைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் பரிந்துரையை நிராகரிக்குமாறு பங்குதாரர்களுக்கு அறிவுறுத்திய ஐ.எஸ்.எஸ் (ISS) மற்றும் கிளாஸ் லூயிஸ் (Glass Lewis) போன்ற ஆலோசனை நிறுவனங்களை எலான் மஸ்க் கடுமையாக சாடினார். அவர்களை கார்ப்பரேட் பயங்கரவாதிகள் என்று கூறியதுடன் இவர்களின் முட்டாள்தனமான பரிந்துரைகளால் நான் வெளியேறிய விரும்பவில்லை. இவர்கள் கடந்த காலத்தில் பல மோசமான பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். அவற்றைப் பின்பற்றியிருந்தால், நிறுவனத்தின் எதிர்காலத்திற்கு அது மிகவும் அழிவுகரமானதாக இருந்திருக்கும் என்றும் மஸ்க் விமர்சித்துள்ளார்.
டென்ஹோம், தனது கடிதத்தில், மஸ்க் தனது நீண்ட கால லட்சியங்களில், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தன்னாட்சி தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான பந்தயத்தில் கவனம் செலுத்த புதிய இழப்பீட்டுத் திட்டம் அவசியம் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். டெஸ்லாவை தவிர, எலான் மஸ்க் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX), சமூக ஊடக தளமான ‘X’-ஐ வைத்திருக்கும் xAI போன்ற நிறுவனங்களுக்கும் தலைமை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
