டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்கின் செயற்கைக்கோள் இணைய சேவை நிறுவனமான ஸ்டார்லிங்க், இந்தியாவில் தனது செயல்பாடுகளைத் தொடங்குவதற்கான முதல் பெரிய அடியை எடுத்து வைத்துள்ளது. இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையை தனது செயல்பாடுகளுக்கான மையமாக தேர்ந்தெடுத்து, விரைவில் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகளைத் தொடங்க தீவிரமாக தயாராகி வருகிறது.
மும்பையில் தலைமை அலுவலகம் : ஸ்டார்லிங்க் நிறுவனம், மும்பையின் புறநகர் பகுதியான சாந்திவாலியில் உள்ள பூமெராங் வணிக வளாகத்தின் தரை தளத்தில் ஒரு அலுவலகத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. தற்போதைய தகவலின்படி, இந்த அலுவலகத்தின் மொத்த பரப்பளவு 1,294 சதுர அடி என்று கூறப்படுகிறது.

இந்நிறுவனத்தின் திட்டங்கள் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத நபர் கூறுகையில், “இந்த அலுவலகம் ஸ்டார்லிங்கின் சட்டக் குழுவால் பயன்படுத்தப்படும். இந்தக் குழு நவம்பரில் இந்த அலுவலகத்திற்கு மாற உள்ளது” என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன், ஸ்டார்லிங்க் நிறுவனம் அருகில் இள்ள பவாய் பகுதியில் ஒரு கோ-ஒர்க்கிங் மையத்தில் சில இருக்கைகளை ஒரு மாதம் வாடகைக்கு எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
குத்தகை விவரங்கள் : Propstack என்ற ரியல் எஸ்டேட் தரவு தளத்தில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களின்படி, இந்த குத்தகை ஒப்பந்தம் அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கிய நிலையில், இது 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இந்தச் சொத்து கனகியா ஸ்பேஸ் ரியால்டி பிரைவேட் லிமிடெட் என்ற பில்டரால் உருவாக்கப்பட்டது.
கனகியா பூமெராங் வளாகத்தை உருவாக்கி இருந்தாலும், அதில் உள்ள பல இடங்களை தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு விற்றுள்ளது. அதன்படி, ஸ்டார்லிங்க் இந்த அலுவலக இடத்தை நிகுஞ்ச் ஷேத் என்பவரிடம் இருந்து குத்தகைக்கு எடுத்துள்ளது.
ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்த அலுவலகத்திற்கு மாத வாடகையாக சுமார் ரூ.3.52 லட்சம் நிர்ணயித்துள்ளதுடன், ரூ.31.7 லட்சத்தை வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வாடகையில் 5% அதிகரிப்பு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
ஸ்டார்லிங்க் இந்த ஒப்பந்தத்தில் ஒரு முக்கியமான நிபந்தனையை இணைத்துள்ளது. அதாவது, நிறுவனம் விரும்பினால், 3 மாத காலம் நோட்டீஸ் கொடுத்து ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியேறலாம். இது சோதனை அடிப்படையில் இடத்தை எடுத்துள்ளதாக கருதப்படுவதால், நிறுவனத்திற்கு அதிக நெகிழ்வுத்தன்மை கிடைத்துள்ளது.
எதிர்காலத் திட்டங்கள் : அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்டார்லிங்க், இந்தியாவில் அதன் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகளை தொடங்குவதற்கு முன் மும்பை, நொய்டா, கொல்கத்தா, சண்டிகர் மற்றும் லக்னோ போன்ற முக்கிய நகரங்களில் 9 நுழைவாயில் பூமி நிலையங்களை (Gateway Earth Stations) அமைக்க திட்டமிட்டுள்ளது.
Propstack-ன் இணை நிறுவனர் ராஜா சீத்தாராமன் கூறுகையில், “ஸ்டார்லிங்கின் இந்திய நடவடிக்கைகளுக்கு மும்பை ஒரு மூலோபாயப் பங்கு வகிக்கும். ஏனென்றால், அவர்கள் அதிவேக செயற்கைக்கோள் இணைப்பைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். இது ஃபைபர் மற்றும் மொபைல் நெட்வொர்க்குகளின் வரம்புகளை கடந்து, கோடிக்கணக்கான மக்களுக்கு இணைப்பை மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்டது” என்று கூறியுள்ளார்.
ஸ்டார்லிங்க் தனது சேவையை தொடங்க தேவையான உள்கட்டமைப்பை நிறுவி வருகிறது. ஆனால், இது யூடெல்சாட் ஒன்வெப் (Eutelsat OneWeb) மற்றும் ஜியோ சாட்டிலைட் (Jio Satellite) போன்ற நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டியிருக்கும். இந்த நிறுவனங்களுக்கும் செயற்கைக்கோள் இணைய சேவைகளை தொடங்க அரசின் அனுமதி கிடைத்துள்ளது.
அனைத்து நிறுவனங்களும் தற்போது தொலைத்தொடர்புத் துறை மற்றும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் செயல்படுத்தி வரும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்காக காத்திருக்கின்றன. ஸ்டார்லிங்கின் இந்த நகர்வு, இந்தியாவில் அதிவேக இணைய இணைப்பின் எதிர்காலத்தை நிச்சயமாகப் புரட்சிகரமாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
