உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள், இன்று முதல் முறையாக 4 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இதுவரையில் இந்த மைல்கல்லை என்விடியா மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே எட்டியிருந்த நிலையில் 3வது நிறுவனமாக ஆப்பிள் எட்டியுள்ளது.
இந்த வருடம் துவக்கத்தில் இருந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்ட ஆப்பிள் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட iPhone 17 தொடர் மாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் பங்குகள் தொடர்ந்து வளர்ச்சி அடைய துவங்கியது, இதன் வாயிலாக இன்று 4 டிரில்லியன் டாலர் என்ற சாதனையை எடுத்துள்ளது.

நாஸ்டாக் குறியீட்டில் ஆப்பிள் பங்குகள் காலை வர்த்தக துவக்கத்தில் 269.87 டாலர் அளவீட்டை எட்டிய போது 4 டிரில்லியன் டாலர் அளவீட்டை தொட்டது. இந்த செய்தி வெளியான அடுத்த சில நிமிடத்தில் ஆப்பிலள் பங்குகளில் முதலீடு செய்தவர்கள் லாபம் பார்க்கும் நோக்கத்தில் விற்க துவங்கியுள்ளனர். இதனால் அமெரிக்க நேரப்படி காலை 10.37 மணியளவில் 0.19 சதவீதம் சரிந்து 268.25 டாலருக்கு சரிந்துள்ளது.
உலகளவில் அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளும் ஏஐ தொழில்நுட்பத்தை பெரிய அளவில் தனது தயாரிப்பில் உட்படுத்தி வரும் வேளையில், ஆப்பிள் இதில் பின்தங்கி வந்தது. ஆனால் இப்புதிய ஐபோன் 17 சீரியஸ் மாடல்களில் சில ஏஐ விஷயங்கள், கிளாஸ் UI ஆகியவை மக்கள் மத்தியில் விருப்பான விஷயமாக மாறியுள்ளது.
இதன் நீட்சியாக ஐபோன் 17 சீரியஸ் போன்கள் சீனா மற்றும் அமெரிக்காவில் iPhone 16 சீரியஸ் விட 14 சதவீதம் அதிக விற்பனையை பதிவு செய்துள்ளன. இந்த வலுவான விற்பனை தான், ஆப்பிள் பங்குகளை அக்டோபர் 28 அன்று 0.4 சதவீதம் உயர்த்தி அதன் சந்தை மதிப்பை 4 டிரில்லியன் டாலராக்கியுள்ளது.
இந்த ஆண்டு ஆப்பிள்-க்கு நேரம் சரியில்லை என்று தான் சொல்ல வேண்டும், ஐபோன்களை சீனா, இந்தியா, பிற ஆசிய நாடுகளில் தயாரிப்பதற்காக டிரம்ப் ஆப்பிள் மீது கடுமையான வரியை விதிக்க உத்தரவிட்டார். டிரம்ப் பல இடத்தில் ஆப்பிள் மற்றும் டிம் குக்-ஐ கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த பிரச்சனைகளை சமாளிக்க அமெரிக்காவில் உற்பத்தி தளம் அமைக்க தயாராகியிருக்கிறது ஆப்பிள். அடுத்தாக ஐபோன் 17 சீரியஸ் அறிமுகம் இவை இரண்டும் தான் ஆப்பிள் பங்குகள் உயர்வுக்கு முக்கியமான காரணமாக இருந்து வருகிறது.
