இந்தியா முழுக்க இருக்கும் மாத சம்பளக்காரர்களின் பிஎப் பணத்தை நிர்வாகம் செய்யும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பிஎப் தொகை செலுத்தும் விதிமுறையில் முக்கியமான மாற்றத்தை கொண்டுவரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஈபிஎப்ஓ அமைப்பு விரைவில் EPF – EPS பலன்களை பெறுவதற்கான ஊதிய வரம்பை ரூ.15,000 இலிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த திட்டமிட்டு உள்ளது. இதனால் மாத சம்பளம் வாங்கும் மக்களுக்கு என்ன லாபம்..?

இந்த மாற்றம் மூலம் அடிப்படை சம்பளம் ரூ.25,000 வரை உள்ள அனைத்து ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) கட்டாயமாக்கப்படும். தற்போது ரூ.15,000 வரை மட்டுமே சம்பளம் வாங்கும் மக்களுக்கு மட்டுமே பிஎம் தொகை செலுத்துவது கட்டாயம் என்ற நிலை உள்ளது.
இதை 25000 ரூபாயாக உயர்த்தும் போது 1 கோடிக்கும் அதிகமான ஊழியர்களுக்கு கூடுதலாக ஓய்வுகால பாதுகாப்பு கட்டாயமாக கிடைக்க செய்யும்.
ஈபிஎப்ஓ அமைப்பு இந்த மாற்றத்தை செயல்படுத்த அடுத்த கூட்டத்தில் இதற்கான ஆலோசனை செய்து இறுதி முடிவுகளை எடுக்கும் என மனிகண்ட்ரோல் தெரிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து இதுகுறித்து எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
தற்போதைய விதிமுறை மற்றும் புதிய மாற்றம்
இப்போது அடிப்படை சம்பளம் ரூ.15,000 வரை உள்ள ஊழியர்களுக்கு EPF மற்றும் EPS திட்டங்களில் பங்களிப்பு செய்ய வேண்டியது கட்டாயம். இதனால் ஒவ்வொரு மாதமும் அடிப்படை சம்பளத்தில் ஊழியரும் நிறுவனமும் தலா 12 சதவீதம் வீதம் பங்களிக்க வேண்டும்.
ஆனால் ரூ.15,000-க்கு மேல் சம்பளம் பெறுவோர் இந்தத் திட்டங்களில் சேர்வதைத் தவிர்க்கலாம், நிறுவனமும் அவர்களைச் சேர வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது.
இந்த வரம்பை தற்போது ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டால், ரூ.15,001 முதல் ரூ.25,000 வரை சம்பளம் பெறுவோரும் கட்டாயம் EPFO அமைப்பில் இணைய வேண்டும். ரூ.25,000 க்கு மேல் சம்பளம் பெறுவோருக்கு மட்டுமே பிஎப் சேவையில் இருந்து பங்கு பெறுவதை தவிர்க்க உரிமை இருக்கும்.
யாரை பாதிக்கும் இந்த மாற்றம்
ரூ.15,001 முதல் ரூ.25,000 வரை அடிப்படை சம்பளம் பெறும் ஊழியர்கள் இதுவரை EPF மற்றும் EPS திட்டங்களில் சேராமல் இருந்திருக்கலாம். இந்த மாற்றம் நிறைவேற்றப்பட்டால் இனி அவர்கள் கட்டாயம் இணைந்து பங்களிக்க வேண்டும்.
இது லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு நீண்ட கால பலன் அளிக்கும், ஓய்வுகால சேமிப்பு அதிகரிக்கும். அதே வேளையில், இது ஊழியர்களின் மாதாந்திர சம்பளத்தை சற்று குறைக்கவும் வாய்ப்புள்ளது.
மாற்றத்திற்கான காரணங்கள்
அரசு இந்த மாற்றத்தை மேற்கொள்வதற்கு முக்கிய காரணம் ஓய்வுகால பாதுகாப்பை விரிவுபடுத்துவதாகும். நடுத்தர வருமானம் பெறும் ஊழியர்களும் ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதி மூலம் பாதுகாப்பு பெற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த முடிவுகளை எடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
