மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை மாற்றி அமைக்கப் போகும் 8ஆவது சம்பள கமிஷன் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்து இருக்கிறது. இது ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பள கமிஷனுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டு விட்டனர். அடுத்த கட்டமாக சம்பள கமிஷன் என்னென்ன பணிகளை மேற்கொள்ளும், மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் உயர வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து தான் தற்போது அனைவரும் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதமே அரசு சம்பள கமிஷன் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் சம்பள கமிஷனுக்கான குறிப்புரைகள், தலைவர் உள்ளிட்ட விவரங்களை நேற்றைய தினம் தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சம்பள கமிஷன் அமைக்கப்பட்ட 18 மாதங்களுக்குள் அரசுக்கு பரிந்துரை வழங்க வேண்டும் என அரசு கூறியுள்ளது.
சம்பள கமிஷன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தற்போது நாட்டின் நிதி நிலவரம் , அரசின் வருவாய் நிலவரம் , பண வீக்கம் உள்ளிட்டவற்றையெல்லாம் ஆய்வு செய்வார்கள் . அதன் அடிப்படையில் ஃபிட்மண்ட் ஃபேக்டர் (Fitment factor) என்பதை வரையறை செய்து அதை அடிப்படையாகக் கொண்டுதான் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்துவார்கள்.
இந்த ஃபிட்மண்ட் ஃபேக்டர் எந்த அளவிற்கு நிர்ணயம் செய்யப்படுகிறதோ அதனை பொறுத்து தான் சம்பளம் என்பது மாறும். இந்த சம்பள கமிஷன் எவ்வளவு ஃபிட்மண்ட் ஃபேக்டர் நியமனம் செய்யப் போகிறது என்பதுதான் மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
7ஆவது சம்பள கமிஷனில் 2.57 என ஃபிட்மண்ட் ஃபேக்டர் வரையறுக்கப்பட்டு அரசு ஊழியர்களுக்கு 157 சதவீத ஊதிய உயர்வு கிடைத்தது. அதாவது குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் என்பது 7,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்ந்தது .ஒரு வேளை இந்த முறையும் 2.57 என்ற ஃபிட்மண்ட் ஃபேக்டர் கருத்தில் கொண்டு சம்பளம் மாற்றி அமைக்கப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் என்பது 18000 ரூபாயில் இருந்து 46 ,260 ரூபாயாக உயரும்.
மத்திய அரசு ஊழியர்கள் 2.57 அல்லது அதற்கும் அதிகமான ஃபிட்மண்ட் ஃபேக்டர் கொண்டு தான் சம்பளம் மாற்றி அமைக்க வேண்டும் என கோருகின்றனர். இந்த சம்பள உயர்வில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகும் மற்றொரு விஷயம் மத்திய அரசின் பட்ஜெட் ஒதுக்கீடு.
மத்திய அரசின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய தொகை செலவுகளுக்கு என எவ்வளவு பட்ஜெட் ஒதுக்கீடு செய்கிறதோ அதுவும் சம்பள உயர்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக மத்திய அரசின் பட்ஜெட் ஒதுக்கீடு 1.75 லட்சம் கோடி என இருந்தால் தற்போது 1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கக்கூடிய ஒரு நபரின் மாத சம்பளம் 1.14 லட்சம் ரூபாயாக அதிகரிக்கும் . ஒருவேளை 2 லட்சம் கோடியாக பட்ஜெட் ஒதுக்கீடு இருந்தால் தற்போது ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கக்கூடிய நபரின் மாத சம்பளம் 1.16 லட்சம் ரூபாயாக உயரும். அதாவது அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு என்பது ஃபிட்மண்ட் ஃபேக்டர் மற்றும் அரசின் பட்ஜெட் ஒதுக்கீடு இரண்டையும் பொறுத்துதான் நிர்ணயம் செய்யப்படும்.


