சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் இரண்டு முறை தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. சர்வதேச காரணிகள் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.
சென்னை பொறுத்தவரை கடந்த ஐந்து நாட்களாக தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வந்தது. சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 97 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் அதிலிருந்து கணிசமாக விலை குறைந்து நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 3 ஆயிரம் ரூபாய் விலை குறைந்தது . ஒரு சவரன் 90 ,000க்கும் கீழ் சென்றது 88,600 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்வு கண்டிருக்கிறது . காலை மாலை என இரண்டு வேளையும் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. சென்னை பொறுத்தவரை ஒரு கிராம் ஆபரண தங்கம் 11,325 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலை மாலை என ஒரே நாளில் தங்கத்தின் விலை கிராமுக்கு 250 ரூபாய் உயர்ந்திருக்கிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை 2000 ரூபாய் விலை உயர்ந்து மீண்டும் 90 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது .
இன்று மாலை இருந்து சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 90600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 3 ஆயிரம் ரூபாய் குறைந்த தங்கம் இன்று ஒரே நாளில் 2000 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது. 24 கேரட் தங்கம் கிராமுக்கு 273 ரூபாய் உயர்வு கண்டு 12,355 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 2184 ரூபாய் உயர்வு கண்டு 98, 840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்த தங்கம் திடீரென உயர்ந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பு தொடர்பான எதிர்பார்ப்பு தான் .அமெரிக்க மத்திய வங்கியின் இரண்டு நாள் பாலிசி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு நாட்கள் கூட்டத்தில் நடைபெற்ற முடிவுகள் இந்திய நேரப்படி இன்று இரவு வெளியிடப்படும். வட்டி குறைப்புக்கான சாதகங்கள் அதிகமாக இருக்கிறது என்பதால் முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தை நோக்கி திரும்பி இருக்கின்றனர் .இதுவே தங்கத்தின் விலை உயர்வதற்கு காரணமாக சொல்லப்படுகிறது .
உலக சந்தையில் ஸ்பாட் கோல்ட் விலை என்பது ஒரு அவுன்ஸ் ஒரு சதவீதம் விலை உயர்ந்து 4 ,025 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. நாளைய தினம் அமெரிக்க மத்திய வங்கியின் அறிவிப்பை பொறுத்து இந்திய சந்தையில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றத்தை நிச்சயம் நம்மால் காண முடியும். ஒரு வேளை வட்டிக் குறைப்பு இருந்தால் தங்கத்தின் விலை அதிகரிக்கும்.


