latest

“2026 – ல் பாஜக தமிழ்நாட்டில் காணாமல் போகும்; மீண்டும் திமுக 2.0 தொடரும்!'' – அமைச்சர் ரகுபதி

[ad_1]

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் பூங்கா முன்பு அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுயஉதவி குழுவினரால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மதி அங்காடியை தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

மேலும், இந்த நிகழ்வில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே. கே. செல்லபாண்டியன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, மாநகராட்சி மேயர் திலகவதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி

குடியுரிமை

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி,

“எஸ்.ஐ.ஆர் குறித்து ஏற்கனவே திமுக மற்றும் அதன் தோழமைக்கட்சிகளின் கூட்டத்தை நடத்தி, அதில் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் அனைத்து கட்சி கூட்டத்தை நவம்பர் 2ஆம் தேதி நடத்த முடிவு செய்துள்ளார். அதில் அனைத்து கட்சிகளின் கருத்துக்களும் பதிவு செய்யப்படும். அதன் பிறகு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறுபான்மையினரைக் ஒட்டுமொத்தமாக வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்கும், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களை நீக்குவதற்கும் தேர்தல் ஆணையத்தின் மூலமாக ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதை எந்த காலத்திலும் திமுக கேட்கவில்லை, ஏற்றுக்கொள்ளவும் இல்லை. பீகாரிலும் இதுபோன்றே நடந்துள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து அகதிகளாக வந்து இங்கேயே வாழ்ந்து வரும் நம்முடைய இலங்கை தமிழர்கள் போன்றவர்களும், பிற நாடுகளில் இருந்து வந்தவர்களும் குடியுரிமை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.”

தேர்தல் ஆணையம்

இலங்கை தமிழர்களுக்கு நாம் இங்கு வீடு, வசதி, ரேஷன் பொருட்கள் அனைத்தும் கொடுத்து வருகிறோம். ஆனால், அவர்களுக்கு இங்கு குடியுரிமை கிடையாது. 11 ஆண்டுகள், 12 ஆண்டுகள் இருந்து, அவர்களின் மூதாதையர்கள் இந்தியாவில் இருந்த ஆதாரத்தை நிரூபித்தாலும் கூட, அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது இல்லை.

ஒரு வாக்காளரை இந்திய குடிமகனா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது Indian Citizenship Act, 1955. ஆனால், இந்திய குடிமகனா இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இது, நமது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி

ஆதாரை ஏற்றுக்கொள்வது என்பது வேறு விஷயம். அதே நேரத்தில், ஒருவரை இந்திய குடிமகனா இல்லையா என்று தீர்மானிக்கக்கூடிய சக்தியை இவர்களுக்கு யார் கொடுத்தார்கள்? ஆதார் வைத்திருப்பவர்கள் இந்திய குடிமகன்தானே? அப்படியானால், தேர்தல் ஆணையம் தான் இந்தியாவின் குடிமகனா இல்லையா என்பதை தீர்மானிக்கும் என்று சொல்வது ஏன்? இது நிச்சயம் தவறு செய்யக்கூடிய முன்னோட்டமாக அமைந்திருக்கிறது.

இதுகுறித்து நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் நாங்களும் இணைந்துள்ளோம். நூற்றுக்கும் மேற்பட்ட இயக்கங்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நேர்மையானவர்கள். அவர்களுக்கு சில கட்டளைகள் வரும்போது, அந்த கட்டளைகளை பின்பற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. எப்படிப்பட்ட ஆணைகளை தேர்தல் ஆணையம் வழங்கும் என்பது தெரியாது.

வாக்காளர் உரிமை

தேர்தல் ஆணையம் தவறான விஷயங்களை சொல்லிவிட்டால், அதிலிருந்து பாதிக்கப்படுபவர்களை காப்பாற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து வேலை செய்யும் மக்களின் எண்ணிக்கை லட்சங்களில் இருந்து தற்போது கோடி கணக்காக உயர்ந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து இங்கு வேலை செய்துவிட்டு, பண்டிகை காலங்களில் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு சென்று விடுகின்றனர்.

ஆனால், இதில் இருக்கக்கூடிய ஆபத்து என்னவெனில் – அவர்களுக்கு இங்கு வாக்காளர் உரிமை வழங்கும்போது, தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை தெரியாது. அவர்கள் தங்களது மாநிலத்தின் அரசியல் மனப்பாங்கை வைத்துக் கொண்டு வாக்களிப்பார்கள்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

அதனால், தமிழ்நாட்டைப் பற்றி தெரியாதவர்களையும், ஒரே இடத்தில் நிரந்தரமாக இல்லாதவர்களையும் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்பதே எங்களது கருத்து.

தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வெளிமாநிலங்களுக்கு செல்பவர்கள் அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுகின்றனர். ஆனால், பீகாரில் இருந்து வருபவர்கள் கோயம்புத்தூரில் இரண்டு மாதம், திருப்பூரில் இரண்டு மாதம், திருச்சி மற்றும் திருநெல்வேலியில் மூன்று மாதம் வேலை செய்கிறார்கள்.

திமுக 2.0 தொடரும்

“இப்படி அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டு தற்காலிகமாகத்தான் பணிபுரிகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்பவர்கள் நிரந்தரமாக அங்கே தங்கி விடுகின்றனர். அதனால், அவர்களை நிரந்தரவாசிகளாக எடுத்துக்கொள்ள முடியும்.

ஆனால், வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் அப்படி இருப்பதில்லை. அவர்களை நிரந்தரவாசிகளாக எடுத்துக்கொள்ள முடியாது. நிரந்தரவாசிகளாக இருப்பவர்கள்தான் வாக்களிக்க முடியும்.

வரும் 2026ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போகுமே தவிர, எங்களது தலைவரோ திமுகவோ காணாமல் போகமாட்டார்கள். மீண்டும் திமுக 2.0 தொடரும்.

த.வெ.க தலைவர் விஜய்
த.வெ.க தலைவர் விஜய்

விஜய் இதுபோன்று வெறுப்பை வெளிப்படுத்தியிருக்கிறார், ஆனால் பொதுமக்கள் மத்தியில் எந்த ஒரு வெறுப்பும் இல்லை. விவசாயிகளுக்கு இழப்பீடு ஏற்படும் போது அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. பொதுமக்களில் யாரும் பாதிக்கப்பட்டதாக கூறவில்லை.

நயினார் நாகேந்திரன், அவருக்கு கொடுக்கப்பட்ட “தலைவர்” என்ற பதவியை தக்கவைத்துக்கொள்ள எதை வேண்டுமானாலும் பேசி வருகிறார். புதிய கூட்டணிகள் அவர்களிடம் செல்லப் போவதில்லை.

கேரளா பி.எம்.சி திட்டத்தில் சேர்த்ததைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. எங்களது கொள்கையைத்தான் நாங்கள் சொல்ல முடியும்,” என்றார்.

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *