[ad_1]
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) புதிய இடைக்கால விதியை அறிவித்து என்ஆர்ஐ-களின் தூக்கத்தை தொலைத்துள்ளது. ஏற்கனவே ஹெச்1பி விசா கட்டுப்பாட்டில் பல லட்சம் டெக் ஊழியர்கள் அமெரிக்க செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ள வேளையில், தற்போதைய புதிய அறிவிப்பு ஹெச்1பி விசா வைத்துள்ளோரின் கணவன்/மனைவியை பாதிக்க உள்ளது.
அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தையில் இருக்கும் தட்டுப்பாட்டை குறைக்க ஹெச்1பி விசா, எல்1 விசா கீழ் வரும் வெளிநாட்டினரின் கணவன்/மனைவி-க்கு வேலை செய்ய வொர்க் பர்மீட் அளிக்கப்பட்டு வந்தது. இதை Employment Authorisation Documents (EAD) வாயிலாக கொடுக்கப்பட்டு வரும் நிலையில் இதில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதி ஆவணம் (EAD) ஆட்டோமேட்டிக் முறையில் நீட்டிப்பை நிறுத்தப்படுகிறது. இந்த மாற்றம் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்களை பாதிக்கும், குறிப்பாக H-1B விசா கொண்ட இந்தியர்களின் மனைவி அல்லது கணவர்களை அதிகம். அக்டோபர் 30, 2025 முதல் இந்த விதி அமலுக்கு வருகிறது என்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இதனால் அடுத்த சில மாதங்களில் அதிகப்படியான வெளிநாட்டினர் தங்களது வேலையை இழக்கலாம். இது அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினரை அதிகளவில் பாதிக்கும் வகையில் உள்ளது.
பழைய விதி எப்படி இருந்தது
H-1B விசா கொண்ட ஊழியர்களின் கணவன்/மனைவி H-4 விசாவில் அமெரிக்காவில் இருக்கலாம். அவர்கள் EAD என்னும் வேலை அனுமதி ஆவணத்தைப் பெற்று அமெரிக்காவில் வேலை செய்ய முடியும். இந்த EAD ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அளிக்கப்படும். இந்த காலக்கெடு காலாவதியாகும் முன் புதுப்பிக்க விண்ணப்பித்தால், தானாக 540 நாட்கள் (18 மாதங்கள்) நீட்டிப்பு கிடைக்கும்.
வெளிநாட்டினரின் EAD விண்ணப்பத்தை ஆய்வு செய்ய USCIS அமைப்புக்கு 6 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்பதால், இந்த ஆட்டோமேட்டிக் நீட்டிப்பு முறை அவர்கள் வேலையை எவ்விதமான தடையுமின்றி தொடர உதவியது. இதனால் ஊழியர்கள் இடையில் வேலை நிறுத்த வேண்டியதில்லை.
புதிய விதியின் முக்கிய மாற்றங்கள்
அக்டோபர் 30, 2025 அன்று அல்லது அதற்குப் பின் EAD புதுப்பிக்க விண்ணப்பிப்பவர்களுக்கு ஆட்டோமேட்டிங் நீட்டிப்பு இல்லை. இதனால் EAD ஆவணத்தில் அச்சிடப்பட்ட காலாவதி தேதியில் அந்த நபர் பணியாற்ற முடியாது. அடுத்த அனுமதி வரும் வரை வேலை செய்யமல் காத்திருக்க வேண்டும். USCIS அனுமதி தாமதமானால் உடனடியாக வேலையில் இருந்து விலக வேண்டும். இது அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினருக்கு ஊதிய இழப்பு, வேலை இழப்பு, தொழில் பாதிப்புக்கு வழிவகுக்கும்.
யார் பாதிக்கப்பட மாட்டார்கள்
அக்டோபர் 30, 2025க்கு முன் EAD புதுப்பிக்க விண்ணப்பித்தவர்கள் பழைய விதிப்படி 540 நாட்கள் நீட்டிப்பு பெறுவர். உதாரணமாக, EAD டிசம்பர் 2025இல் காலாவதியானால் செப்டம்பர் 2025இல் விண்ணப்பித்தால் அனுமதி வரும் வரை வேலை செய்யலாம். இவர்களுக்கு எந்த பாதிப்பும் இன்றி அவர்களது பணியை தொடரலாம்.
யார் பாதிக்கப்படுவர்
அக்டோபர் 30க்குப் பின் விண்ணப்பிப்பவர்கள், குறிப்பாக H-1B விசா உரிமையாளரின் கணவன்/மனைவி பாதிக்கப்படுவர். USCIS ஆய்வு 6 மாதங்களுக்கு மேல் ஆனால் வேலையில் இருந்து விலக வேண்டும். இதனால் ஊதியமின்மை, நிறுவனத்தில் பதவி இழப்பு ஏற்படலாம். பலர் வேலையை விட்டு விலக நேரிடும்.
இந்தியர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்
அமெரிக்காவில் H-1B விசா கொண்டவர்களில் 70 முதல் 80 சதவீதம் பேர் இந்தியர்கள். H-4 விசா வைத்துக்கொண்டு EAD மூலம் வேலை செய்வோர் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர் என கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானோர் இந்திய பெண்கள். அவர்கள் தொழில்நுட்பம், சுகாதாரம், நிதி போன்ற அதிக சம்பளம் பெறும் வேலைகளில் உள்ளனர். இந்த புதிய விதி என்ஆர்ஐ மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும்.
எளிய உதாரணம்
தற்போது நிர்ணயம் செய்யப்பட்ட அக்டோபர் 30ஆம் தேதி படி கணக்கிட்டால்..
பழைய விதியில் EAD டிசம்பர் 1, 2025இல் காலாவதியானால் ஆகஸ்ட் 2025இல் விண்ணப்பித்தால் ஜூன் 2027 வரை வேலை செய்யலாம். புதிய விதியில் நவம்பர் 2025இல் விண்ணப்பித்தால் டிசம்பர் 1இல் EAD முடிவடைந்து டிசம்பர் 2 முதல் வேலையில் இருந்து நிற்க வேண்டும், மீண்டும் அனுமதி பெற ஒரு ஆண்டு ஆனாலும் அதுவரையில் பணியில் சேர முடியாது.
[ad_2]
