[ad_1]
இந்திய நிதி மற்றும் தொழில் உலகில் முக்கிய ஆளுமையாகத் திகழும் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி, தனது நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் தொடர்பான மோசடி வழக்குகளால் தொடர்ந்து நெருக்கடியைச் சந்தித்து வருகிறார். குறிப்பாக, ஐடிபிஐ (IDBI) வங்கியால் தொடுக்கப்பட்ட மோசடி வழக்கில், தனக்குச் சாதகமான நிவாரணம் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவை, வாபஸ் பெற்றுள்ளார்.
சுமார் ரூ.750 கோடி கடன் விவகாரத்தில், முறையான ஆவணங்கள் வழங்கப்படாமல் தனிப்பட்ட விசாரணைக்கு உட்படுத்தப்படுவதைத் தடுக்க அவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்த நிலையில், இந்த வழக்கு இப்போது ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் கீழ் உள்ள வங்கியின் மோசடி பரிசீலனைக் குழுவின் விசாரணைக்குச் செல்கிறது. தொழிலதிபர் அனில் அம்பானிக்கு ஏற்பட்ட இந்தச் சட்டப்பூர்வ பின்னடைவும், அடுத்தகட்ட விசாரணையும் நிதிச் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிவாரணம் கோரிய அம்பானி : ஐடிபிஐ வங்கி மோசடி வழக்கில் தனிப்பட்ட விசாரணை நடத்துவதற்கு முன்பு, அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமக்கு வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் அனில் அம்பானியின் வழக்கறிஞர்களான அங்கித் லோகியா மற்றும் அமித் நாயக் கோரிக்கை விடுத்திருந்தனர். அதுவரை தனிப்பட்ட விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அதே சமயம், அனில் அம்பானிக்கு தனிப்பட்ட விசாரணைக்காக பல வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும், அவர் அவற்றை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று ஐடிபிஐ வங்கி தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்தேஷ் டி பாட்டீல் தலைமையிலான விடுமுறைக் கால அமர்வு, அம்பானியின் மனுவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க விரும்பவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.
நீதிமன்றம் நிவாரணம் வழங்க மறுத்ததைத் தொடர்ந்து, அனில் அம்பானியின் வழக்கறிஞர்கள், தாங்கள் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இந்த விவகாரம் அம்பானிக்கு ஒரு சட்டப்பூர்வ பின்னடைவாக கருதப்படுகிறது.
மோசடி விசாரணைக்கான காரணம் : ஐடிபிஐ வங்கி, அனில் அம்பானிக்கு எதிராக ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் படி, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன்படி, ஒரு நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள், கடனுக்கான நிதியை மாற்றியமைத்தாலோ அல்லது முறைகேடாகப் பயன்படுத்தினாலோ அவர்களை மோசடி செய்தவர்களாக அறிவிக்க வங்கிகளுக்கு அதிகாரம் உண்டு.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் அதன் கடன் பொறுப்புகளை செலுத்தத் தவறியதால் திவால் நிலைக்குச் சென்றது. இந்த RCom நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன்கள் தொடர்பாகவே ஐடிபிஐ வங்கி இந்த மோசடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக வங்கியின் மோசடி பரிசீலனைக் குழுவின் அடுத்த விசாரணை வரும் அக்டோபர் 30ஆம் தேதியான இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் இந்திய தொழில் மற்றும் நிதி வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
[ad_2]

 
                         
                         
                         
                         
                         
				
			 
				
			 
				
			 
				
			