கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் நகருக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது. ஓசூரில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பெங்களூருக்கு சென்று விட முடியும் என்பதால் பெங்களூருவில் இருக்கும் விலைவாசி, ரியல் எஸ்டேட் உயர்வு உள்ளிட்டவை காரணமாக ஏராளமான மக்கள் ஓசூரில் தங்கி அங்கிருந்து பெங்களூருக்கு பயணம் செய்கின்றனர்.
ஓசூரில் இருந்து பெங்களூருக்கு வேலை மார்க்கமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் சென்று வருகின்றனர். பல்வேறு நிறுவனங்களும் உற்பத்தி ஆலைகளை ஓசூரிலும், அலுவலகங்களை பெங்களூருவிலும் அமைத்திருப்பதால் இரு நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து முக்கியம் வாய்ந்ததாக இருக்கிறது.

இத்தகைய சூழலில் தான் பெங்களூருக்கும் ஓசூருக்கும் இடையே மெட்ரோ ரயில் இணைப்பு கொண்டு வரப்படும் என கர்நாடக மாநில அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது இரு நகரங்களுக்கும் இடையினான போக்குவரத்தை எளிதாக்குவது மட்டுமில்லாமல் ஓசூர் நகரத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் என சொல்லப்பட்டது . இத்தகைய சூழலில் தான் பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம், பெங்களூர் – ஓசூர் இடையிலான மெட்ரோ ரயில் இணைப்பு திட்டம் குறித்த ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டு இருக்கிறது.
பெங்களூர் மெட்ரோ ரயில் கழக நிர்வாகம் இரு நகரங்களுக்கு இடையிலான மெட்ரோ ரயில் திட்ட இணைப்பு குறித்த விரிவான ஆய்வு அறிக்கை நடத்தியதாகவும் தொழில்நுட்ப ரீதியிலாக இது சரிப்பட்டு வராது என அறிக்கை தந்து இருப்பதாகவும் டெக்கன் ஹெரால்டு செய்தி தெரிவித்திருக்கிறது. அதாவது இரண்டு மெட்ரோ ரயில் நிறுவனங்களும் வேறுபட்ட மின்சார கட்டமைப்புகளை பயன்படுத்துவதால் அவற்றை ஒருங்கிணைத்து இந்த ரயில் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியம் இல்லை என அதில் குறிப்பிட்டு இருக்கிறார்களாம்.
ஓசூர் மற்றும் பொம்மசந்திராவை இணைக்கும் வகையிலான மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இது ஓசூர் நகரத்தின் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவும் என்பதால் தமிழ்நாடு அரசும் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது . ஆனால் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொழில்நுட்ப ரீதியிலாக சாத்தியம் இல்லை என பெங்களூர் மெட்ரோ ரயில் கழகம் தற்போது அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது .
இரு மாநிலங்களுக்கும் இடையிலான டிராக்சன் சிஸ்டம்கள் மாறுபட்டு இருப்பதால் அதற்கான எலக்ட்ரிக்கல் அமைப்புகளை ஒருங்கிணைக்க முடியாது என கூறியுள்ளனர். முன்னதாக சென்னை மெட்ரோ ரயில் கழகம் ஓசூர் பொம்மசந்திரா இடையிலான மெட்ரோ ரயில் சேவைக்கு விரிவான திட்ட அறிக்கையை தயாரித்த போது 25 கிலோ வாட் ஏசி ஓவர்ஹெட் ட்ராக்சன் சிஸ்டம் அமைத்தால் ரயில் இணைப்பு சாத்தியம் என கூறியிருந்தது.
ஆனால் பெங்களூரு மெட்ரோ ரயில் கழக நிர்வாகம் 750 V DC third rail system என்ற அமைப்பை தாங்கம் பயன்படுத்துவதாக்வும் இந்த இரண்டு மின் இணைப்புகளையும் ஒன்றிணைத்து ரயிலை இயக்குவது என்பது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளது. பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் தங்களின் ஆய்வறிக்கையை கர்நாடக மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளது. மாநில அரசாங்கமே இதில் இறுதி முடிவு எடுக்கும் என்றும் பெங்களூரு மெட்ரோ ரயில் கழக அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.