இந்தியாவின் தொழில்நுட்ப நகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருவில், அடுத்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை 20 சதவீதத்திற்கும் மேலாக உயரும் என்று மாநில அரசுத் தரவுகள் தெரிவித்துள்ளன. பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்குநரகத்தின் அறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டில் சுமார் 1.22 கோடியாக இருந்த பெங்களூருவின் மொத்த மக்கள் தொகை, 2031ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 1.47 கோடியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவிலேயே 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பெங்களூருவில் மட்டும் 1.93% மக்கள் தொகை வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுக்கடங்காத மக்கள் தொகை உயர்வுக்கு, பெங்களூருவின் வலுவான மற்றும் வேலைச் சந்தையே முக்கியக் காரணம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கர்நாடகாவின் மொத்த மக்கள் தொகையில் பெங்களூருவின் பங்கு 2021இல் 18.2% ஆக இருந்தது. இது 2031ஆம் ஆண்டுக்குள் 20.7% ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவுகள் தலைநகரின் நெரிசலைக் குறைப்பதன் அவசியத்தையும், மாநிலத்தின் மற்ற நகர்ப்புற மையங்களை வலுப்படுத்த வேண்டியதன் தேவையையும் உணர்த்துகின்றன.
இதுகுறித்து பொருளாதார மற்றும் புள்ளியியல் இயக்குநரகத்தின் இணை இயக்குநர் கே. நரசிம்ம ஃபானி கூறுகையில், “பெங்களூருவின் வளர்ச்சிக்கு வாழ்வாதார வாய்ப்புகளே முக்கிய உந்துசக்தி. கர்நாடகாவுக்கு வெளியே இருந்து மட்டுமல்லாமல், மாநிலத்திற்குள்ளேயே நடைபெறும் இடப்பெயர்வும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக, கர்நாடகாவின் நகர்ப்புறப் பங்கு 2021ஆம் ஆண்டில் 43.9% ஆக இருந்த நிலையில், இது 2031 ஆம் ஆண்டுக்குள் 47.8% ஆக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், நகரின் தற்போதைய எல்லைக்குள் இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளே கடுமையான அழுத்தத்தில் இருக்கும்போது, எல்லை விரிவாக்கம் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து ஜெயின் பல்கலைக்கழகத்தின் ஆலோசகரும், இன்ஸ்டிடியூட் ஃபார் சோஷியல் அண்ட் எகனாமிக் சேஞ்சின் (ISEC) முன்னாள் இயக்குநருமான டாக்டர் எஸ். மாதேஸ்வரன் கூறுகையில், “பெங்களூருவின் நகரத் திட்டமிடல் கட்டமைப்பு மிகவும் பழமையானது. புதிதாகச் சேர்க்கப்பட்ட பகுதிகளும், நகரத்தின் விளிம்பில் உள்ள புறநகர் பகுதிகளும் தற்போதைய திட்டங்களில் பிரதிபலிக்கவில்லை. பகுதிகள் வாரியான தரவுகள் இல்லாமல், திட்டமிடல் என்பது தோல்விக்கான அபாயத்தை அதிகரிக்கும்” என்று எச்சரித்துள்ளார்.
முன்னர் கிராமப்புறமாக இருந்து தற்போது பெங்களூருவின் விளிம்புகளுடன் இணைந்திருக்கும் புறநகர் பகுதிகள் Blind Spots பகுதிகளாக மாறியுள்ளன. இந்தப் பகுதிகளில் நிர்வாகக் குறைபாடுகள் ஏற்படுவதால் சுகாதாரம், கல்வி மற்றும் குடிமை வசதிகளை வழங்குவது கடினமாக உள்ளது. உதாரணமாக, ஒவ்வொரு 50,000 பேருக்கும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைப்பதற்குக் கூட இங்கு நுண்ணிய தரவுகள் தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெங்களூருவில் தற்போதுள்ள இந்த நெருக்கடியான நிலை மற்ற இந்திய நகரங்கள் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மற்ற நகரங்களும் இதேபோன்ற சிரமங்களை எதிர்கொள்ளும் முன், துரிதமான உள்கட்டமைப்பு மேம்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.