[ad_1]
யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ரானா கபூர், அனில் அம்பானியின் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய ஒருதலைப்பட்சமாக எடுத்த முடிவால், யெஸ் வங்கிக்கு ரூ.2,700 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக மத்திய புலனாய்வுத் துறை (CBI) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யெஸ் வங்கிக்கும், அம்பானியின் குழும நிறுவனங்களுக்கும் இடையேயான முறைகேடான பரிவர்த்தனைகள் தொடர்பான வழக்கில் இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம், சிபிஐ 13 பேர் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் அனில் அம்பானி, ரானா கபூர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் மீது கிரிமினல் சதி, ஏமாற்றுதல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மேலும், அனில் அம்பானியின் மகன் அன்மோல் அம்பானியின் (அப்போதைய ரிலையன்ஸ் கேபிடல் நிர்வாக இயக்குநர்) பங்கு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

ரூ.2,796 கோடி இழப்பு : யெஸ் வங்கியின் தலைமை கண்காணிப்பு அதிகாரி அளித்த இரண்டு புகார்களின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரானா கபூர் வங்கியின் நிர்வாக இயக்குநராகவும், தலைமைச் செயல் அதிகாரியாகவும் இருந்தபோது, 2017 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் அனில் அம்பானி குழுமத்தின் நிதி நிறுவனங்களில் மொத்தம் ரூ.5,010 கோடி முதலீடு செய்துள்ளார்.
இந்த முதலீடுகளில் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மாற்ற முடியாத கடன் பத்திரங்களில் செய்யப்பட்ட ரூ.2,965 கோடி மற்றும் ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வணிக ஆவணங்களில் செய்யப்பட்ட ரூ.2,045 கோடி ஆகியவை அடங்கும். இந்த மொத்த முதலீட்டில் ரூ.3,337.5 கோடி 2019 டிசம்பரில் செயல்படாத முதலீடாக மாறியது.
இந்த முதலீடுகளுக்கு எதிரான பிணைகளில் இருந்து முழு தொகையையும் வங்கியால் மீட்க முடியவில்லை. இதன் விளைவாக யெஸ் வங்கிக்கு ரூ.2,796.77 கோடி இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
குற்றப்பத்திரிகையின் முக்கிய அம்சங்கள் : ராணா கபூரின் ஒருதலைப்பட்ச முடிவே இந்த முதலீடுகளுக்குக் காரணம். சந்தையில் தேவை இல்லாத கடன் பத்திரங்களை வாங்குவது வங்கிக்கு பாதகமானது என்று தெரிந்தும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த முதலீடுகள், ரானா கபூரின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு RHFL மற்றும் RCFL வழங்கிய கடன்களுக்கான பதிலுக்குப் பரிசு ஏற்பாட்டின் விளைவாகும்.
ரானா கபூரின் மனைவி (பிந்து கபூர்) மற்றும் மகள்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள் அனில் அம்பானியின் அறிவுறுத்தலின் பேரில் RHFL மற்றும் RCFL-இல் இருந்து குறைந்த வட்டியில் ரூ.570 கோடி கடன் வசதிகளைப் பெற்றுள்ளன. இந்தக் கடன் வசதிகள் பற்றி ரானா கபூர் வங்கிக்கு தெரிவிக்கவில்லை.
அம்பானியின் செல்வாக்கின் காரணமாக ரிலையன்ஸ் நிப்பான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், கபூரின் மகள்களுக்கு சொந்தமான நிறுவனத்தின் கடன் பத்திரங்களையும், யெஸ் வங்கியின் AT-1 பத்திரங்களையும் வாங்கியது. மியூச்சுவல் ஃபண்ட் விதிமுறைகள் அம்பானி தனது மற்ற நிறுவனங்களில் நேரடியாக முதலீடு செய்ய தடை விதித்ததால், யெஸ் வங்கி மூலம் மறைமுகமாக இதனை செய்ததாக சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது. சிபிஐ-யின் இந்தக் குற்றப்பத்திரிகை, இந்திய நிதித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வழக்கில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[ad_2]
